இறந்தவரின் உடலை வாய்க்காலில் இறங்கி தண்ணீரில் சுமந்து செல்லும் அவலம்
நீடாமங்கலம் அருகே, பாலம் இல்லாததால் இறந்தவரின் உடலை வாய்க்காலின் இறங்கி தண்ணீரில் சுமந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் அருகே, பாலம் இல்லாததால் இறந்தவரின் உடலை வாய்க்காலின் இறங்கி தண்ணீரில் சுமந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
பாசன வாய்க்கால்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் மேலாளவந்தசேரி ஊராட்சி தேவங்குடி கிராமத்தில் பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டவில்லை. தேவங்குடி கிராமத்தில் யாராவது இறந்தால், பாசன வாய்க்காலை கடந்து 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள மயானத்துக்கு கொண்டு சென்று தகனம் செய்யும் நிலை உள்ளது.
இந்த வாய்க்காலில் தண்ணீர் செல்லும் காலங்களில், தேவங்குடி கிராமத்தில் யாராவது இறந்தால் அவரது உடலை தோளில் சுமந்து கொண்டு கழுத்தளவு தண்ணீரில் சென்று தகனம் செய்யும் அவல நிலை உள்ளது.
தண்ணீரில் உடலை சுமந்து சென்றனர்
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த அய்யாக்கண்ணு என்பவரின் மனைவி ஆட்சி அம்மாள் (வயது78) என்பவர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் அவரது உடலுக்கு இறுதி சடக்குகள் செய்யப்பட்டு மயானத்திற்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்.
அப்போது மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள பாசன வாய்க்காலில் தண்ணீர் சென்றதால் ஆட்சி அம்மாள் உடலை உறவினர்கள் கழுத்தளவு தண்ணீரில் தோளில் சுமந்து சென்றனர். பின்னர் மயானத்தில் ஆட்சி அம்மாள் உடல் தகனம் செய்யப்பட்டது.
கிராம மக்கள் வேதனை
இந்த வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே தமிழக அரசும், திருவாரூர் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து தேவங்குடி கிராமத்தில் உள்ள வாய்க்காலின் குறுக்கே பாலமும், மயானத்திற்கு கான்கிரீட் கொட்டகையும் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.