இறந்தவரின் உடலை இடுப்பளவு தண்ணீரில் சுமந்து செல்லும் அவலம்


இறந்தவரின் உடலை இடுப்பளவு தண்ணீரில் சுமந்து செல்லும் அவலம்
x

கறம்பக்குடி அருகே முறையான பாதை இல்லாததால் இறந்தவர்களின் உடலை இடுப்பளவு தண்ணீரில் சுமந்து செல்லும் அவல நிலை உள்ளது. எனவே மயான பாதை வசதி செய்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை

40 ஆண்டுகளாக...

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா திருமணஞ்சேரி ஊராட்சி மற்றும் பட்டத்திக்காடு ஊராட்சியில் வசிக்க கூடிய சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் திருமணஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட மயிலாடி தெருவில் உள்ள மயானத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த மயானத்திற்கு செல்ல முறையான பாதை வசதி இல்லை. இதனால் கடந்த 40 ஆண்டுகளாக மயானத்திற்கு செல்ல விவசாய நிலங்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள கிராங்குளத்தில் இறங்கி தான் இறந்தவர்களின் உடலை எடுத்து சென்று வருகின்றனர்.

இடுப்பளவு தண்ணீரில்...

இந்நிலையில் தற்போது பெய்துவரும் மழையின் காரணமாக மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள கிராங்குளத்தில் தற்போது தண்ணீர் நிரம்பி உள்ளது. இவ்வேளையில் திருமணஞ்சேரி ஊராட்சி மயிலாடி தெருவை சேர்ந்த பழனிவேல் என்பவரின் மனைவி பாஞ்சாலை (வயது 50) என்பவர் இன்று உடல் நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து அவரது உடலை கிராங்குளத்தின் வழியாக இடுப்பளவு தண்ணீரில் தூக்கி சென்று உறவினர்கள் தகனம் செய்தனர்.

உறுதி அளித்தனர்

கடந்த ஆண்டும் இதேபோல் தொடர் மழையின் காரணமாக கிராங்குளம் நிரம்பியிருந்த நிலையில் கழுத்தளவு தண்ணீரை தாண்டிய நீர்மட்டத்தில் உயிரிழந்தவர்களின் உடலை நீச்சல் அடித்து சுமந்தும் செல்லும் நிலை ஏற்பட்டது.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த கிராமத்திற்கு சென்ற அதிகாரிகள் மயான பாதை அமைத்து தருவதாக உறுதி அளித்து சென்றனர். ஆனால் ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், வட்டார வளர்ச்சி அலுவலர் தாசில்தார் தொடங்கி முதல்-அமைச்சர் வரை பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த ஆண்டு இறந்தவரின் உடலை சுமந்து சென்றவர் நீரில் முழ்கினார். அவரை காப்பாற்ற பெரும்பாடு ஆனது. மழை பெய்தாலே அச்சப்பட வேண்டிய நிலை உள்ளது.

எப்போது இப்பிரச்சினைக்கு விடிவுகாலம் பிறக்கும் என ஏக்கத்துடன் காத்திருக்கிறோம். எனவே மயிலாடி தெரு கிராமத்திற்கு மயான பாதை வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story