டிரைவர் கொலை வழக்கில் மகன் தப்பிக்க உதவிய தந்தையும் கைது


தினத்தந்தி 27 Feb 2023 12:15 AM IST (Updated: 27 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகா்கோவிலில் நடந்த ஆட்டோ டிரைவர் கொலையில் போலீசாரிடம் இருந்து மகன் தப்பிக்க உதவிய தந்தையும் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி

நாகா்கோவில்:

நாகா்கோவிலில் நடந்த ஆட்டோ டிரைவர் கொலையில் போலீசாரிடம் இருந்து மகன் தப்பிக்க உதவிய தந்தையும் கைது செய்யப்பட்டார்.

ஆட்டோ டிரைவர் கொலை

நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல் தெருவை சேர்ந்தவர் கிறிஸ்துராஜ் (வயது 54), ஆட்டோ டிரைவர். கடந்த 16-ந் தேதி இவர் ஆசாரிபள்ளம் இந்திரா நகரில் சாலை ஓரம் ரத்த காயங்களுடன் கிடந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே நேசமணிநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிறிஸ்துராஜை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த வழக்கில் போலீசாா் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கடைசியாக கிறிஸ்துராஜ் செல்போனுக்கு தொடர்பு கொண்ட நபர் யார்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். இதில் போலீசாருக்கு துப்பு கிடைத்தது. அதன்பேரில் வடக்கு கோணத்தை சேர்ந்த கொத்தனார் அருண்குமார் (21) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் தான் கிறிஸ்துராஜை தாக்கி விட்டு தப்பியது தெரியவந்தது.

கொத்தனார் கைது

அதாவது கிறிஸ்துராஜை சவாரிக்கு அழைத்துச் சென்ற அருண்குமார் அவரிடம் நிறைய பணம் இருந்ததை பார்த்துள்ளார். அப்போது அந்த பணத்தை பறிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டிய அவர் கொலை வெறி தாக்குதல் நடத்தி கிறிஸ்துராஜிடம் இருந்து பணத்தை பறித்துச் சென்றது விசாரணையில் அம்பலமானது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த கிறிஸ்துராஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதனை தொடர்ந்து போலீசார் நேற்றுமுன்தினம் அருண்குமாரை கைது செய்தனர். இதற்கிடையே கொலையில் இருந்து அருண்குமார் தப்பிக்க அவருடைய தந்தை தங்கராஜ் உதவியதும் தெரியவந்தது.

சம்பவத்தன்று கிறிஸ்துராஜை தாக்கி விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த அருண்குமார் தனது தந்தை தங்கராஜிக்கு செல்போன் மூலம் பேசியுள்ளார். அதுவும் கிறிஸ்துராஜின் செல்போனில் இருந்தே தொடர்பு கொண்டுள்ளார்.

தந்தையும் சிக்கினார்

அப்போது அருண்குமார் போலீசாரிடம் சிக்காமல் தப்பி செல்வதற்கு தலைமறைவாக இருக்கும்படி தங்கராஜ் உதவியுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் அவரையும் அதிரடியாக கைது செய்தனர்.

ஆட்டோ டிரைவர் கொலையில் தந்தை- மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story