ஓடும் ரெயில் மீது கற்களை வீசியதில் பெண் பயணி படுகாயம்
ஓடும் ரெயில் மீது கற்களை வீசியதில் பெண் பயணி படுகாயம் அடைந்தார்.
சென்னையை சேர்ந்தவர் எல்லம்மாள் (வயது 43). நேற்று இவர், தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல்லில் நடக்கும் திருமண விழாவில் பங்கேற்பதற்காக சென்னை-பாலக்காடு விரைவு ரெயிலில் திண்டுக்கல் நோக்கி வந்துகொண்டிருந்தார். சேலம் மாவட்டம் மோகனுார் அருகே ரெயில் வந்த போது தண்டவாள பகுதியில் நின்றுகொண்டிருந்த மர்ம நபர்கள் ரெயில் மீது கற்களை வீசினர்.
இதில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த எல்லாம்மாளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து பதறிபோன உறவினர்கள் ரெயில்வே அதிகாரிகளை தொடர்புகொண்டு அவருக்கு சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்யும்படி கூறினர். இதற்கிடையே ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தை நேற்று காலை 6.30 மணிக்கு வந்தடைந்தது. பின்னர் அவருக்கு ரெயில்வே டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன் பிறகு எல்லம்மாளை உறவினர்கள் அழைத்துச்சென்றனர். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.