பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மஞ்சள் நீர் உற்சவத்துடன் திருவிழா நிறைவு
பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மஞ்சள் நீர் உற்சவத்துடன் திருவிழா நிறைவுபெற்றது.
பெரம்பலூர் நகரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலின் மாசி மக பெருந்திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று வரை நடந்தது. கடந்த 4-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், 6-ந் தேதி சப்பர தேரோட்டமும் நடந்தது. நேற்று முன்தினம் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் அரசு இசைப்பள்ளி மாணவ-மாணவிகள் தேவார ஆசிரியர் நடராஜன் தலைமையில் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளை பாராயணம் செய்தனர். இதில் திரளான சிவனடியார்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் நிறைவு நாளான நேற்று மாலை மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது. இதனை முன்னிட்டு உற்சவ மூர்த்தியான சந்திரசேகரசுவாமி, ஆனந்தவள்ளி கேடயத்தில் திருவீதி உலா வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் திருவிழாவை சிறந்த முறையில் நடத்திய சிவாச்சாரியார்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதன் ஒரு பகுதியாக சிவாச்சாரியார்களை பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் சீர்பாதம் பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக சென்று அவர்களது வீட்டில் விட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து சிவபெருமான் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பக்தர்களுக்கு பானகம், மோர் மற்றும் பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டது. திருத்தேர் 8-ம் திருவிழா வருகிற 13-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 10.30 மணியளவில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடக்கிறது.