மண்பானைகளில் பொங்கலிடுவோம்களைகட்டி வரும் பொங்கல் பண்டிகைஇல்லத்தரசிகள் கருத்து


மண்பானைகளில் பொங்கலிடுவோம்களைகட்டி வரும்        பொங்கல் பண்டிகைஇல்லத்தரசிகள் கருத்து
x
தினத்தந்தி 12 Jan 2023 6:45 PM GMT (Updated: 12 Jan 2023 6:45 PM GMT)

மண்பானைகளில் பொங்கலிடுவோம்: களைகட்டி வரும் பொங்கல் பண்டிகை- இல்லத்தரசிகள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்.

தென்காசி

தமிழர்களின் திருநாளாம் பொங்கல் திருவிழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும்.

அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியை வெல்லம், பால், நெய் சேர்த்துப் புதுப்பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும், கால்நடைகளுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும். அதனை கொண்டாட தமிழ்நாடு தயாராகி விட்டது.

பொங்கல் பரிசு

அரசு தரப்பில் ரூ.1000 பரிசும், கரும்புடன் ரேசன் கடைகளில் பொங்கல் தொகுப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

எங்கும் பச்சரிசி, வெல்லம், கரும்பு, மண் பானைகள், கலர் கோலப்பொடி, புத்தாடைகள் விற்பனை களைகட்டி வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மண்பானைகள் விற்பனை மும்முரமாக நடக்கிறது.

களை கட்டி வரும் பொங்கல் பண்டிகை குறித்து நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த இல்லத்தரசிகள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்.

இல்லத்தரசி

நெல்லை டவுனை சேர்ந்த இல்லத்தரசி ராஜகுமாரி:-

பொங்கல் பண்டிகை தமிழர்களின் பாரம்பரியமான விழா ஆகும். இந்த விழா அன்று அதிகாலையில் வீட்டின் முன்பு அழகான வண்ண கோலமிட்டு, புத்தம் புது மண் பானையில் பொங்கலிட்டு சூரியனுக்கு படைப்பது வழக்கம். சூரிய உதயத்துக்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக பொங்கலிட தொடங்கி, சூரியன் உதிக்கும் போது அதற்கு நன்றி தெரிவித்து படையல் போடுவோம். குறிப்பாக சம்பா பச்சரிசியில் பொங்கலிடுவது மிக சிறப்பு.

மேலும் நமக்கு 3 வேளை உணவு வழங்கும் உழவர் பெருமக்களை போற்றும் வகையில் அனைத்து வகை காய்கறிகளையும் கொண்டு கூட்டு, பொரியல், சமையல் செய்வோம். அதனை உறவினர்கள், அக்கம், பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு பகிர்ந்து கொடுத்து மகிழ்வோம்.

பல்கலைக்கழக மாணவி

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவி உமா மகேஸ்வரி:-

எங்கள் வீட்டில் மண்பானையில் பொங்கல் வைத்து வருகிறோம். தமிழகத்தின் பாரம்பரியமான பொங்கல் விழாவில் மண்பானையில் பொங்கல் வைப்பதால் நமது கலாசார முறையை பின்பற்றுகின்றோம் என்ற ஒரு மன நிம்மதி ஏற்படுகிறது. மண்பானையில் பொங்கல் வைத்து சாப்பிடுவதால் தனி மனமும், சுவையும் ஏற்படுகிறது.

பொங்கல் அன்று அதிகாலையில் குளித்து புத்தாடை அணிந்து அனைவரும் அமர்ந்து, பனை ஓலையால் தீ மூட்டி பானையில் பொங்கல் வைத்து பொங்கி வரும் பொழுது பொங்கலோ பொங்கல் என்று குலவையிடும்போது புத்துணர்ச்சி நமக்கு ஏற்படுகிறது. பாரம்பரிய முறையில் நாம் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைத்து வருகிறோம் என்பதில் நமது குடும்பத்திற்கு பெரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஆகவே, நாம் மண்பானையில் பொங்கல் வைத்து பொங்கலை கொண்டாடுவோம்.

பாரம்பரியத்தை கூறமுடியும்

திசையன்விளை செல்வமருதூரை சேர்ந்த குடும்ப தலைவி கார்த்தீஸ்வரி:-

தமிழர் திருநாள் என்பது இயற்கையில் விளைந்த பொருட்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா. மண்பானையில் பனை ஓலையால் பொங்கலிட்டு, பாரம்பரியத்தை தொடர்ந்து கடைபிடித்து வந்தால், வருங்கால சந்ததியினருக்கும் பொங்கல் திருநாள் பாரம்பரியத்தை கூறமுடியும்.

கிராமத்து வாழ்க்கையில் இருந்து நகரத்து வாழ்க்கைக்கு நகர நகர தமிழர் திருநாளின் பாரம்பரியத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம். நாம் எங்கு வாழ்ந்தாலும் தமிழர் திருநாளின் பாரம்பரியத்தை பழமை மாறாது கொண்டாட வேண்டும். இதுவே தமிழர் திருநாளின் சிறப்பு.

சிறப்பாக கொண்டாட வேண்டும்

தென்காசியை சேர்ந்த இல்லத்தரசி வசந்தி:-

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இயற்கையை வணங்குவதற்காக உருவானது. இந்த நாளில் வீடுகளை சுத்தம் செய்து கோலமிட்டு புது பானையில் பொங்கலிடுவோம். முந்தைய காலங்களில் நமது பாரம்பரிய உடை அணிந்து பொங்கலிட்டனர்.

தற்போது நவீன காலத்திற்கு ஏற்ப உடை அணிவதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நமது பாரம்பரியத்தை வருங்கால சந்ததியினருக்கு நினைவூட்டும் வகையில் பழைய காலம் போல கொண்டாட வேண்டும். எங்களது வீட்டில் இந்த ஆண்டு பொங்கலை சிறப்பாக கொண்டாட இருக்கிறோம்.

வெளியூர் செல்வதில்லை

பாவூர்சத்திரம் காமராஜர் நகர் தெற்கு பகுதியைச் சேர்ந்த தர்மகனி:-

பொங்கல் பண்டிகையை நமது பாரம்பரிய முறைப்படி நாங்கள் கொண்டாடுகிறோம். எங்கள் பகுதியில் உள்ள வீட்டுகளின் முன்பு பொங்கலிடுவோம். இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் வெளியூருக்கு செல்லாமல் இங்கேயே இருந்து பண்டிகையை கொண்டாட முடிவு செய்து கொண்டாடுவோம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என தனித்தனியாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவோம்.

இவ்வாறு கூறினர்.


Next Story