வடமதுரை அருகே செடி, கொடிகளில் பற்றி எரிந்த தீ
வடமதுரை அருகே செடி, கொடிகளில் தீப்பிடித்து எரிந்தது.
வடமதுரை அருகே திண்டுக்கல்-திருச்சி நெடுஞ்சாலையில் கோப்பம்பட்டி பிரிவு பகுதியில் தனியாருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் செடி, கொடிகள் மற்றும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. மேலும் அங்குள்ள புதர்கள், செடி, கொடிகள் காய்ந்துபோய் இருந்தன. இந்தநிலையில் நேற்று அந்த நிலத்தின் அருகில் குடியிருப்பு பகுதியில் உள்ள காய்ந்த புற்களில் திடீரென்று தீப்பற்றியது. அதில் இருந்து தீ பரவி, காலி நிலத்தில் இருந்த செடி, கொடிகளில் பற்றி மளமளவென எரிந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து செடி, கொடிகளில் எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீவிபத்து காரணமாக திண்டுக்கல்-திருச்சி நெடுஞ்சாலையில் புகைமூட்டமாக காட்சியளித்தது. இதனால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. மேலும் தீப்பிடித்த இடத்தின் அருகில் 2 மின்சார டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. முன்எச்சரிக்கையாக அந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.