சிவகங்கை, புதுக்கோட்டையில் இன்று முதல்-அமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்
சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
சென்னை,
பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும், திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்குச் செல்கிறார்.
மதுரை மேலூரில் உள்ள அஞ்சப்பர் ஓட்டலில் தங்கியிருக்கும் அவர், அங்கிருந்து இன்று காலை 9 மணிக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டு சிவகங்கை மாவட்டம் வேங்கைபட்டியை 9.45 மணிக்கு சென்றடைகிறார். அங்கு சமத்துவபுரத்தை அவர் தொடங்கி வைக்கிறார்.
புதுக்கோட்டையில்....
வேங்கைபட்டியில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு சிவகங்கை மாவட்டம் காரையூருக்கு 11 மணிக்கு செல்கிறார். காரையூரில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அங்கிருந்து பகல் 12 மணிக்கு புறப்பட்டு, புதுக்கோட்டை பயணிகள் விடுதிக்கு பிற்பகல் 1.30 மணிக்கு சென்றடைகிறார்.
பயணிகள் விடுதியில் ஓய்வெடுத்த பின்பு மாலை 4.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டுத் திடலுக்கு 5 மணிக்கு செல்கிறார்.
சென்னை வருகை
அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 6.30 மணிக்கு விளையாட்டுத் திடலில் இருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டு திருச்சி விமான நிலையத்தை இரவு 8 மணிக்கு சென்றடைகிறார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்படும் விமானத்தில் பயணித்து சென்னைக்கு இன்றிரவு 10.05 மணிக்கு வருகிறார்.