மீன் மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது


மீன் மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது
x

திசையன்விளை மீன் மார்க்கெட்டில் நேற்று மீன்களை வாங்க கூட்டம் அலைமோதியது.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை மீன் மார்க்கெட்டில் நேற்று மீன்களை வாங்க கூட்டம் அலைமோதியது.

மீன் மார்க்கெட்

நெல்லை மாவட்டம் திசையன்விளை மீன் மார்க்கெட் வாரச்சந்தை வளாகத்தில் உள்ளது. இங்கு நெல்லை மாவட்டம் உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, இடிந்தகரை, கூத்தன்குழி, பெருமணல், தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை, மணப்பாடு, ஆலந்தலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், கடல் பகுதியில் பைபர் படகு மற்றும் தூண்டில் மூலம் பிடிக்கப்படும் பல்வேறு வகையான மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

இங்கு மீன்கள் வாங்க நாங்குநேரி, பரப்பாடி, நாசரேத், மெஞ்ஞானபுரம், சாத்தான்குளம், கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள் அதிக அளவில் வருகிறார்கள். இதனால் இங்கு திங்கள், புதன், சனிக்கிழமைகளில் கூட்டம் அலைமோதும்.

கூட்டம்

தற்போது அய்யப்ப பக்தர்கள் விரதத்தை முடித்து அசைவத்திற்கு திரும்பியுள்ளனர். பொங்கல் பண்டிகையும் நிறைவடைந்துள்ளது. சைவத்தை கடைபிடித்து வந்தவர்கள் அசைவ உணவிற்கு மாறியுள்ளனர்.

இதனால் நேற்று திசையன்விளை மீன் மார்க்கெட்டில் மீன்களை வாங்க வழக்கத்தைவிட கூட்டம் அலைமோதியது. மார்க்கெட் திருவிழா போல் காட்சியளித்தது. கூட்ட நெரிசலை பொருட்படுத்தாமல் ஒருவரை ஒருவர் முண்டியடித்தபடி தங்களுக்கு விருப்பமான மீன்களை வாங்கி சென்றனர்.

மீன் விலையும் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. சென்றவாரம் சாளைரக மீன் ரூ.10-க்கு 10 முதல் 12 வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று ரூ.10க்கு 4 சாளைரக மீன்கள் விற்பனை செய்யப்பட்டது. சீலா ரக மீன் கிலோ ரூ.800, மாவுலா ரக மீன் கிலோ ரூ.250 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் அனைத்து வகை மீன் விலையும் உயர்வாக இருந்தது. வெளியூர் சென்றவர்கள் கருவாடுகளை விருப்பத்துடன் வாங்கி சென்றனர் இதனால் கருவாடு விற்பனையும் களைகட்டியது


Next Story