சூறைக்காற்று வீசியதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை


சூறைக்காற்று வீசியதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 4 July 2023 12:15 AM IST (Updated: 4 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குமரி கடல் பகுதியில் சூறைக்காற்று வீசியதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்ைல. இதனால், அவர்கள் தங்களது கட்டுமரங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்தனர்.

கன்னியாகுமரி

குளச்சல்:

குமரி கடல் பகுதியில் சூறைக்காற்று வீசியதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்ைல. இதனால், அவர்கள் தங்களது கட்டுமரங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்தனர்.

சின்னமுட்டம்

கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன. இந்தநிலையில் நேற்று கடலில் சூறைக்காற்றுடன் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. இதனால் சின்னமுட்டத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் நேற்று காலையில் கடலுக்கு செல்லவில்லை.

இதேபோல் ஆரோக்கியபுரம், கன்னியாகுமரி, வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த பைபர் படகுகள், வள்ளங்கள் மற்றும் கட்டு மரங்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவர்கள் தங்களின் வள்ளம், கட்டுமரங்களை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

குளச்சல்

குளச்சல் மீன் பிடித்துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்கள், கட்டுமரங்கள் மீன் பிடித்து வருகின்றன. விசைப்படகுகளுக்கு மீன் பிடிக்க தடைக்காலம் அமலில் உள்ளதால் அவற்றை துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்று குளச்சல் கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியதால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெரும்பாலான பைபர் வள்ளங்கள், கட்டுமரங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்களது வள்ளம் மற்றும் கட்டுமரங்களை மேடான பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர்.

இந்தநிலையில் ஒரு சில மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்களுக்கு குறைவான மீன்களே கிடைத்தது. இதனால், மீன்கள் வாங்க வந்திருந்த வெளியூர், உள்ளூர் வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அத்துடன் சந்தைகளில் மீன் வரத்து குறைந்து விலை உயர்ந்தது.


Next Story