குமரி மேற்கு கடற்கரையில் மீன்பிடி தடைக்காலம் நாளை மறுநாள் தொடக்கம்விசைப்படகுகள் கரை திரும்பின
குமரி மேற்கு கடற்கரையில் மீன்பிடி தடைக்காலம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி விசைப்படகுகள் கரை திரும்பின.
குளச்சல்,
குமரி மேற்கு கடற்கரையில் மீன்பிடி தடைக்காலம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி விசைப்படகுகள் கரை திரும்பின.
மீன்பிடி தடைக்காலம்
மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த மீன்பிடி தடைக் காலம் 2 பருவ காலமாக உள்ளது.
குமரி கிழக்கு கடற்கரை பகுதியாகிய கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரையும் மீன்பிடி தடைக்காலம் ஆகும். மேற்கு கடற்கரை பகுதிகளாகிய மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமத்தில் ஜூன் 1-ந் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி வரையும் தடைக்காலம் அமலில் இருக்கும்.
நாளை மறுநாள் தொடக்கம்
குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித்தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றன. ஒரு விசைப்படகு ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன்பிடித்துவிட்டு கரை திரும்புவது வழக்கம். ஆழ்கடல் பகுதியில்தான் உயர் ரக மீன்களாகிய கணவாய், இறால், புல்லன், சுறா, கேரை போன்றவை கிடைக்கும். இதற்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் ஐஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களை விசைப்படகில் எடுத்து செல்வார்கள்.
இந்த ஆண்டு குமரி மேற்கு கடற்கரை கிராமங்களில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது.
இதையொட்டி குளச்சல் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பிய வண்ணம் உள்ளன. பெரும்பான்மையான விசைப்படகுகள் கரை திரும்பி விட்டன. கடந்த 3 நாட்களாக மீன் பிடித்து கரை திரும்பிய விசைப்படகுகள் மீண்டும் கடலுக்கு செல்லவில்லை. அவை மீன் பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த மீன் பிடி தடைக்காலத்தில் விசைப்படகினர் படகுகளை பழுது பார்த்து, வலைகளை பின்னுவது மற்றும் மீன்பிடி உபகரணங்களை பராமரிப்பு செய்வார்கள். மீன் பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாது. ஆனால் கட்டுமரங்கள், பைபர் படகுகள் வழக்கம்போல் மீன் பிடிக்க செல்லும்.