மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பு..!
டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து விநாடிக்கு 7,500 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
மேட்டூர்,
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலம் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து 2 அணைகளில் இருந்தும் உபரி நீர் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த 3 நாட்களாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து காணப்படுகிறது.
நேற்று முன்தினம் வினாடிக்கு 4ஆயிரத்து 654 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் நேற்று வினாடிக்கு 5 ஆயிரத்து 26 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 385 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையின் நீர்மட்டம் 55.79 அடியாக உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து வினாடிக்கு 7ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 21.652 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.