ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 98 ஆயிரம் கனஅடியாக குறைந்தது


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 98 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
x

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 98 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

தர்மபுரி

பென்னாகரம்:

ஒகேனக்கல்

கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதனால் இந்த இரண்டு அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் அதிக அளவில் உபரிநீர் திறந்து விடப்பட்டது.

தொடர்ந்து தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரட்டி, பிலிகுண்டு, ராசி மணல் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நீர்வரத்து குறைந்தது

நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் நீர்வரத்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 15 ஆயிரம் கனஅடியாகவும், மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 98 ஆயிரம் கனஅடியாகவும் குறைந்தது. இருப்பினும் சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகள், நடைபாதை, மாமரத்து கடவு பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகள் தண்ணீரில் மூழ்கின.

குறிப்பாக ஐந்தருவிகளை மூழ்கடித்தப்படி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என்று போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

தடை நீடிப்பு

காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.

குறிப்பாக கடந்த ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி முதல் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டது. இந்த தடை நேற்று 14-வது நாளாக நீடிக்கிறது. அதேபோல் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்றுடன் 61-வது நாளாக தடை நீடிப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story