கொடைக்கானலை ஆக்கிரமித்த பனிமூட்டம்
பகலவனின் முகத்தை பார்க்க முடியாத வகையில், கொடைக்கானலில் பனிமூட்டம் ஆக்கிரமித்தது.
சர்வதேச சுற்றுலாதலமான கொடைக்கானலில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே பனி சீசன் தொடங்கியது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடைக்கானலில் உறைபனி நிலவியது. தற்போது நீர்ப்பனி நிலவி வருகிறது. கிழக்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று காலை முதலே அடர்ந்த பனி மூட்டம் காணப்பட்டது.
குறிப்பாக கொடைக்கானல் மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, கலையரங்கம், உகார்த்தேநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அடர் பனி மூட்டம் நிலவியது. இதன் காரணமாக பகல்நேரத்திலேயே வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. பகலவனின் முகம் தெரியாத அளவுக்கு கொடைக்கானலை அடர்ந்த பனி மூட்டம் ஆக்கிரமித்து கொண்டது. பகலில் கடும் குளிர் வாட்டியது. பனிமூட்டத்துடன் கூடிய லேசான சாரல் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர். அடர்ந்த வனப்பகுதியில் படர்ந்த பனிமூட்டத்தால் ஒட்டு மொத்தமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது என்று சொல்லலாம்.