அம்மா உணவகத்தில் உணவு தரமாகவும், ருசியாகவும் உள்ளது


அம்மா உணவகத்தில் உணவு தரமாகவும், ருசியாகவும் உள்ளது
x

அம்மா உணவகத்தில் உணவு தரமாகவும், ருசியாகவும் உள்ளது

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகத்தில் உணவு தரமாகவும், ருசியாகவும் உள்ளது என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அம்மா உணவகம்

அன்றாடம் கூலி வேலைக்கு செல்பவர்கள், சாலையோர வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் மலிவு விலையில் வயிராற உணவு வழங்கும் இடம் அம்மா உணவகம். தமிழகம் முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சி பகுதிகளில் அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ந் தேதி சென்னை சாந்தோம் பகுதியில் அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா அம்மா உணவகத்தை தொடங்கி வைத்தார்.

காலை உணவாக இட்லி, பொங்கல், மதிய உணவாக சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கருவேப்பிலை சாதம் போன்ற கலவை சாதங்கள் இங்கு வழங்கப்பட்டு வருகின்றன. மலிவு விலையில் உணவு கிடைப்பதால் பொதுமக்களிடையே அம்மா உணவகங்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் தொடங்கப்பட்ட இந்த மலிவு விலை உணவு வினியோக திட்டம் பிற மாநிலங்களுக்கும் முன்னோடியோக திகழ்கிறது. தமிழகத்தை போல ஆந்திரா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

4 நகராட்சிகளில்...

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர் ஆகிய 4 நகராட்சிகளிலும் அம்மா உணவகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த அம்மா உணவகங்களின் தற்போதைய நிலை என்ன?. இவைகள் தற்போது எப்படி இயங்குகிறது? அனைத்து உணவு வகைகளும் தரமாக இருக்கிறதா? தாராளமாக கிடைக்கிறதா?. முன்பு இருந்ததுபோல் அம்மா உணவகங்களில் கூட்டம் இருக்கிறதா? என்பதை இங்கே காண்போம்!.

திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் பிரதான பனகல் சாலையில் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 24-ந்தேதி முதல் அம்மா உணவகம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

திருவாரூர் அழகிரி காலனியை சேர்ந்த மாரியம்மாள்: நான் குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் உள்ளிட்டவற்றை பழைய பஸ் நிலையத்தில் தரைக்கடையாக போட்டு விற்பனை செய்கிறேன். எனக்கு குறைந்த வருமானம் என்றாலும், அதனை ஈடு செய்கின்ற நிலையில் அம்மா உணவகம் இருந்து வருகிறது. எனக்கு குறைந்த செலவில் பசியினை போக்கும் அம்மா உணவகம் நிறைவினை தருகிறது.

திருவாரூர் வாழவாய்க்கால் பகுதியை சேர்ந்த சூர்யா: நான் சென்னையில் தான் வேலை பார்த்து வந்தேன். அப்போது அங்கு அம்மா உணவகம் மிகுந்த வசதியாக இருந்து வந்தது. தற்போது திருவாரூரில் உள்ள தனியார் ஆன்லைன் உணவகத்தில் வேலை பார்க்கிறேன். இங்கும் அம்மா உணவகத்தில் உணவு நன்றாக உள்ளது. இன்னும் சுவையை கூட்டினால் மேலும் சிறப்பாக இருக்கும்.

திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த மாணவன் விஷால்: எனக்கு சொந்த ஊரு திருத்துறைப்பூண்டி. 8-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். தற்போது திருவாரூர் அரசு இசைப்பள்ளியில் நாதஸ்வரம் இசை குறித்து 3 ஆண்டு பயிற்சி வகுப்பில் படித்து வருகிறேன். ஊரில் இருந்து வருவதற்கு பஸ் பாஸ் அரசு வழங்கியுள்ளது. அதேபோல் பசியினை போக்கிட குறைந்த விலையில் அம்மா உணவகம் இருப்பதால் எந்தவித சிரமங்கள் இன்றி படிப்பை தொடர்கிறேன்.

ஏழை-எளிய மக்களுக்கு வரப்பிரசாதம்

அம்மா உணவகத்தை நடத்தும் கமலாம்பாள் மகளிர் சுயஉதவிக்குழு தலைவி மைதிலி: கடந்த 2015-ஆண்டு அம்மா உணவகம் திறக்கப்பட்டு கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்திற்கு தேவையான மளிகை உள்ளிட்ட பொருட்கள் திருவாரூர் நகராட்சி மூலம் வழங்கப்பட்டு வருகிறது. 12 உறுப்பினர்களை கொண்டு இந்த அம்மா உணவகத்தை செயல்படுத்தி வருகிறோம்.

குறைந்த விலையில் பசியினை போக்கும் உணவகம் என்பதால் பெரிய லாபம் இல்லையென்றாலும் மன நிறைவு இருக்கிறது. இந்த உணவகத்தில் அடிப்படை வசதிகளை அரசு மேம்படுத்தி கொடுத்தால் மக்களுக்கு தேவையான உணவினை மேலும் ருசியுடன் தயாரித்து குறைந்த விலையில் வழங்க முடியும். இந்த திட்டம் ஏழை எளிய மக்களுக்கு வரப்பிரசாதமாக திகழ்கிறது. எனவே அம்மா உணவகத்தினை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் சாலையில் உள்ள அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் அம்மா உணவகம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு, ஆஸ்பத்திரியில் தங்கி இருப்பவர்கள், ஆஸ்பத்திரிக்கு உறவினர்களை பார்க்க வருபவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் தினமும் சாப்பிட்டு வருகின்றனர்.

இந்த உணவகத்தின் மேற்பார்வையாளர் கண்ணகி: கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மகளிர் குழுக்கள் மூலம் உள்ள ஊக்குனர் மற்றும் பிரதிநிதிகளை கொண்டு இந்த அம்மா உணவகத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 12 பேர் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.

உணவகத்தை இன்னும் மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருத்துறைப்பூண்டியை சேர்ந்த தொழிலாளி கார்த்தி: அம்மா உணவகத்தில் வழங்கப்படும் சாம்பார் மற்றும் தயிர் சாதம் வீட்டில் உள்ள உணவு போலதான் இருக்கிறது. குறைந்த விலையில் நிறைவான சாப்பாடு கிடைக்கிறது. இது எங்களை போன்ற தொழிலாளிகளுக்கு வரப்பிரசாதமாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மன்னார்குடி

மன்னார்குடி சந்தைப்பேட்டையில் அம்மா உணவகம் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சாதாரண மற்றும் அன்றாட தொழிலாளர்கள் பசியை போக்கும் விதமாக குறைந்த விலையில் உணவுகள் சுகாதார முறையில் தயாரிக்கப்பட்டு இங்கு வழங்கப்படுகிறது. இங்கே 12 மகளிர் சுய உதவி குழு பெண்கள் கொண்ட குழுவினர் சமையல் மற்றும் வினியோக பணியை கவனித்து வருகின்றனர். சமையலறை மற்றும் உணவு கூடம் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட்டு உணவு தயாரிக்கப்படுகிறது.

மன்னார்குடியை சேர்ந்த கருவாடு விற்பனை செய்யும் தொழிலாளி லட்சுமி: 5 இட்லி ஐந்து ரூபாய்க்கு வாங்கி சாப்பிடுவேன். அது போதுமானதாக எனக்கு இருக்கிறது. இட்லி சுவையாகவும் மிருதுவாகவும் இருக்கிறது. அதேபோல மதியம் ஒரு சாம்பார் சாதம் அல்லது ஒரு தயிர் சாதம் வாங்கி சாப்பிடுவேன். அது எனக்கு போதுமானதாக உள்ளது. உணவு தரமாக உள்ளது. இந்த திட்டம் ஏழை,எளியவர்களுக்கு வரப்பிரசாதம்.

திருமக்கோட்டை அடுத்த பாலையூரை சேர்ந்த கோவிந்தராஜ்: மன்னார்குடி வரும்போதெல்லாம் இங்கு வந்து தான் சாப்பிடுவேன். மதியம் சாம்பார் சாதம் அல்லது தயிர் சாதம் வாங்கி சாப்பிடுவேன். அது ருசியாக இருக்கிறது. சாப்பாடு வழங்கப்படும் எவர்சில்வர் தட்டிற்கு மேலாக ஒரு இலை வைத்து உணவு வழங்கினால் சாப்பிடுவதற்கு சுகாதாரமாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் நகராட்சி பகுதியில் புதிய பஸ் நிலையம் எதிரில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலையில் நகர பகுதியில் வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளிகள், முதியோர்கள், வாகனங்களில் செல்வோர் மற்றும் பள்ளி மாணவர்கள் சாப்பிட்டு வருகின்றனர். இதுகுறித்து பணியாளர் குழு தலைவி அமிர்தவள்ளி: அம்மா உணவகம் பணிகளை ஒரு குழுவாக சேர்ந்து செயல்படுத்தி வருகின்றோம். உணவு முறைகளை முறையாக கடைப்பிடிக்கின்றோம். பயனாளிகள் விரும்பும் வகையில் சூடாகவும், சுவையாகவும் தயார் செய்து கொடுக்கின்றோம். தினமும் 500 பேர் வந்து சாப்பிடுகின்றனர். மழை காலங்களில் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் குறையும் போது இந்த எண்ணிக்கை சற்று குறையும்.

கூத்தாநல்லூர் உணவகத்தில் சாப்பிட்டு வரும் குருமூர்த்தி: நான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். நான் காலையிலேயே வேலைக்கு புறப்பட வேண்டியதால், மதியம் சாப்பாடு தயார் செய்து எடுத்து வர முடியாமல் உள்ளது. இதனால் தினமும் காலை மற்றும் மதியம் அம்மா உணவகத்தில் சாப்பிடுகிறேன். இதனால் எனக்கு சவுகரியமாக உள்ளது. அதேபோல நான் சாப்பிடும்போதே உணவகத்தில் நிறைய பேர் சாப்பிடுவார்கள். அதனால், அம்மா உணவகம் என் போன்றவர்கள் பசியை போக்குகிறது. உணவகத்தை மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story