சத்துணவு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்
சத்துணவு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
கரூர் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கார்த்திகேயன், தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் தங்கதுரை வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் சுந்தரம் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். போராட்டத்தில் அரசின் பிற துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பும்போது தகுதியுள்ள அமைப்பாளர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். அமைப்பாளர் ஓய்வு வயது 62 ஆக உயர்த்திட வேண்டும். கருணை பணியிடங்களை ஆண் வாரிசுகளுக்கும் வழங்க வேண்டும். சமையலர், உதவியாளர்கள் 5 ஆண்டு பணி முடித்து இருந்தால் அவர்கள் கல்வி தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6,250 வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு அமல்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.