மணல் லாரி சென்றபோது தரைப்பாலம் இடிந்து விழுந்தது


தஞ்சையில், புதிதாக கட்டப்பட்ட 18 நாளில் மணல் லாரி சென்ற போது தரைப்பாலம் இடிந்து விழுந்தால் பரபரப்பு ஏற்பட்டது. புதிய பாலம் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சையில், புதிதாக கட்டப்பட்ட 18 நாளில் மணல் லாரி சென்ற போது தரைப்பாலம் இடிந்து விழுந்தால் பரபரப்பு ஏற்பட்டது. புதிய பாலம் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆதாம் வடிகால் பாலம்

தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ளது சிராஜூதீன் நகர். இந்த பகுதியில் பெரிய சாலை உள்ளது. இந்த சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் வாய்க்காலான ஆதாம் வடிகால் வாய்க்கால் செல்கிறது.

இந்த வாய்க்காலில் உள்ள தரைப்பாலம் சேதம் அடைந்ததையடுத்து புதிய தரைப்பாலம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் செலவில் கட்டப்பட்டது. கடந்த 18 நாட்களுக்கு முன்புதான் இந்த பாலம் கட்டப்பட்டது.

மணல் லாரியால் இடிந்தது

இந்த பகுதியில் வசிக்கும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த பாலம் வழியாகத்தான் சென்று வந்தனர். மேலும் அருகில் பள்ளிகள் இருப்பதால் புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் மீது இருசக்கர வாகனங்கள் சென்று வந்தன.

இந்த நிலையில் நேற்று காலை அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. லாரியின் முன்பகுதி பாலத்தை கடந்து விட்ட நிலையில் பின்பகுதி பாலத்தின் மீது வந்தபோது திடீரென தரைப்பாலம் இடிந்து விழுந்தது. இதில் லாரியின் பின்பகுதி வாய்க்காலுக்குள் விழுந்தது. முன்பகுதி அந்தரத்தில் தொங்கியது.

18 நாளில் இடிந்தது

பாலம் கட்டப்பட்ட 18 நாட்களுக்குள் பாலம் இடிந்து விழுந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. பாலம் இடிந்து விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மாற்றுப்பாதையில் சென்று வந்தனர்.

இதையடுத்து லாரியில் இருந்த மணலை டிராக்டர் மூலம் அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் லாரியை அப்புறப்படுத்தும் பணி நடந்தது.

உரிய நடவடிக்கை

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், பாலம் கட்டப்படும் போது முறையாக பணிகள் நடைபெறவில்லை என்று குற்றம் சாட்டினோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாலம் எவ்வளவு நிதியில் கட்டப்படுகிறது என்ற விவரம் எதுவும் அறிவிப்பு பலைகயில் இடம்பெறவில்லை. தரமற்ற முறையில் அந்த பாலம் கட்டப்பட்டதால்தான் பாலம் இடிந்து விழுந்து உள்ளது.

இந்த பகுதியில் அடிக்கடி பள்ளி வாகனங்கள் சென்று வருகின்றன. நல்ல வேளையாக பள்ளி வாகனங்கள் எதுவும் விபத்துக்குள்ளாகவில்லை. மணல் லாரி விபத்துக்குள்ளானதில் டிரைவர் உள்ளிட்ட யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே இதற்கு காரணமானவர்கள் மீது உரிய முறையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story