வடமாநில கும்பல் தங்கியிருந்த பகுதியில் வனத்துறையினர் திடீர் சோதனை


வடமாநில கும்பல் தங்கியிருந்த பகுதியில் வனத்துறையினர் திடீர் சோதனை
x
தினத்தந்தி 28 Feb 2023 12:15 AM IST (Updated: 28 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி வனப்பகுதியில் புலி வேட்டையாடப்பட்ட சம்பவம் தொடர்பாக, வடமாநில கும்பல் தங்கியிருந்த எடக்காடு பகுதியில் வனத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

நீலகிரி

மஞ்சூர்

நீலகிரி வனப்பகுதியில் புலி வேட்டையாடப்பட்ட சம்பவம் தொடர்பாக, வடமாநில கும்பல் தங்கியிருந்த எடக்காடு பகுதியில் வனத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

புலி வேட்டை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் சுற்றித்திரிந்த ஒரு வடமாநில கும்பலை வனத்துறையினர் பிடித்து சோதனை செய்தனர். அதில், புலி தோல், நகம், எலும்பு உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது. விசாரணையில் அவர்கள், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதும், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி வனப்பகுதியில் புலியை வேட்டையாடியதும், சத்தியமங்கலம் பகுதியில் தங்கியிருந்து புலி தோலை விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. அவர்களை நீலகிரிக்கு அழைத்து வந்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

பவாரியா வேட்டை கும்பல்

அப்போது புலியை வேட்டையாட பயன்படுத்திய பிரத்யேக கருவிகள், தற்காலிக கூடாரம், பாத்திரங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் கொடூரமாக வேட்டை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் பவாரியா கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று அந்த வடமாநில கும்பல் நீலகிரியில் தங்கியிருந்த எடக்காடு தக்கர் பாபா நகர் பகுதியில் வனத்துறையினர் மற்றும் எமரால்டு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் ஒருசில வீடுகளுக்குள் புகுந்து திடீர் சோதனை செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

மான் கொம்பு பறிமுதல்

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

இந்த பகுதியில் கம்பளி விற்பனை செய்வது போல, கடந்த 2 ஆண்டுகளாக அந்த வடமாநில கும்பல் தங்கியிருந்து புலி வேட்டையில் ஈடுபட்டு உள்ளது. மேலும் அங்கு வசிக்கும் உள்ளூர் நபரின் ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கியுள்ளது. அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம.

வடமாநில கும்பலிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில் இருந்து யார், யாருக்கு தொடர்பு கொண்டனர்? என்ற விவரங்களை சேகரித்து, அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இங்கு தங்கியிருந்தபோது யாருடன் நெருங்கி பழகினார்கள்?, சொந்த ஊருக்கு சென்று வந்தார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகிறோம். தற்போது நடந்த சோதனையில் ஒரு வீட்டில் இருந்து மான் கொம்பு பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

-------------------------


Next Story