அதிகாரிகளுக்கு வனத்துறையினர் உண்மையான தகவல் தெரிவிப்பதில்லை


அதிகாரிகளுக்கு வனத்துறையினர் உண்மையான தகவல் தெரிவிப்பதில்லை
x

யானைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வனத்துறையினர், உயர் அதிகாரிகளுக்கு உண்மையான தகவல் தெரிவிப்பதில்லை என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

வேலூர்

குறைதீர்வு கூட்டம்

குடியாத்தம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். தாசில்தார்கள் நெடுமாறன், சுமதி உள்ளிட்ட வருவாய்துறையினர், வேளாண்மை, வனத்துறையினர், மின்சாரம், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். பாலாஜி வரவேற்றார்.

கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு பேசினர். அப்போது அவர்கள் பேசியதாவது:-

நிவாரணம் வழங்க வேண்டும்

வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு பெருத்த சேதம் ஏற்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் திட்டப்பணிகளில் பணியாளர்களை விவசாயம் சார்ந்த எந்தெந்த பணிகளில் ஈடுபடுத்தலாம் என ஊரக வளர்ச்சித் துறை சார்பில் தெரிவிக்க வேண்டும். போஜனாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் விஷ பூச்சிகள் வருகின்றன. எனவே சுற்றுச்சுவர் ஏற்படுத்தி தர வேண்டும். குடியாத்தம் பகுதியில் நிறுத்தப்பட்ட மினிபஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்.

சிங்கல்பாடி கிராமத்திற்கு உடனடியாக கிராம சிப்பந்தி நியமிக்க வேண்டும், இந்த கிராமத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் சரிவர வருவதில்லை. மோர்தானா அணையை சுற்றுலா தலமாக்கி, அங்கு புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். கடந்த மாதம் வீசிய சூறாவளி காற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

உண்மையான தகவல் தெரிவிப்பதில்லை

நெல்லூர் பேட்டை பகுதியில் மீண்டும் மாட்டு சந்தை இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரணாம்பட்டு அடுத்த சாரங்கல் பகுதியில் யானைகளால் விவசாயிகள் பெருத்த சேதம் அடைகிறார்கள். வனத்துறையினர் யானைகள் வருவதை தடுக்கவில்லை. இதனால் அதிக அளவு பயிர் சேதம் ஏற்படுவதுடன், உயிர் சேதமும் ஏற்படும் அபாயம் உள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

வனவிலங்குகளை தடுக்க அலாரம் சிஸ்டம் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இப்பகுதியில் உள்ள வனத்துறையினர் யானைகளால் ஏற்படும் சேதம், பாதிப்புகள் குறித்து உண்மையான தகவல்களை உயரதிகாரிகளுக்கு தெரிவிப்பதில்லை.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.


Next Story