சிறுத்தைப்புலியை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திண்டாட்டம்


சிறுத்தைப்புலியை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திண்டாட்டம்
x

நொய்யல் அருகே சிறுத்தைப்புலியை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் கடந்த 5 நாட்களாக திண்டாடி வருகிறார்கள்.

கரூர்

5 ஆடுகள் பலி

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே அத்திப்பாளையம் புதூரை சேர்ந்தவர் நாச்சிமுத்து (வயது 57), விவசாயி. இவர் தனது வீட்டின் அருகே பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம விலங்கு 5 ஆடுகளை கடித்து கொன்றது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் சரவணன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்குள்ள காலடி தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ததில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருந்தது தெரியவந்தது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே இருக்கூர் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாக எடுக்கப்பட்ட கால் தடமும், அத்திப்பாளையம் பகுதியில் எடுக்கப்பட்ட கால் தடமும் ஒரே மாதிரியாக இருந்ததால் இருக்கூர் பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தைப்புலி காவிரி ஆற்றில் இறங்கி அத்திப்பாளையம் பகுதிக்கு வந்திருக்கலாம் என்பது தெரியவந்தது.

கூண்டு வைப்பு

இதையடுத்து, அந்த சிறுத்தைப்புலி நடமாடிய பகுதிகளில் கூண்டு வைத்தும் 18 இடங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், அந்த கிராமத்தில் நொய்யல் ஆற்றங்கரையில் சிறுத்தைப்புலி பதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் இடத்தில் கூண்டு வைத்து, அதனும் ஆட்டுக் குட்டியை கட்டி வைத்து சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

மேலும், வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து அத்திப்பாளையம், அத்திப்பாளையம் புதூர், சேர்வைக்காரம்பாளையம், வி.என்.புதூர் மற்றும் நொய்யல் ஆற்றங்கரையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்சமயம் வரை சிறுத்தைப்புலி நடமாடத்தை கண்டுபிடிக்க முடியாமல் மாவட்ட வனத்துறையினரும், சிறப்பு பயிற்சி பெற்ற வனத்துறையினரும் கடந்த 5 நாட்களாக திண்டாடி வருகின்றனர்.

கல்குவாரியில் பதுங்கலா?

அத்திப்பாளையம் புதூர் பகுதிக்கு வந்திருந்த சிறுத்தைப்புலி குப்பம் பகுதியில் உள்ள கல்குவாரிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள கற்குவியலில் பதுங்கி இருக்கலாம் அல்லது நொய்யல் ஆற்று பகுதியில் உள்ள புதரில் மறைந்து இருக்கலாம் என்றும், அவ்வாறு இல்லையெனில் நொய்யல் ஆற்று ஓரமாக இரவு நேரங்களில் ஈரோடு மாவட்டத்திற்கு நடந்து சென்றிருக்கலாம் என்றும் வனத்துறையினர் கருதுகின்றனர்.

மேலும் சிறுத்தைப்புலியின் எச்சத்தை சேகரித்து வனத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதன் மூலம் அந்த சிறுத்தைப்புலி எத்தனை நாட்களுக்கு முன்பு எச்சம் போட்டுள்ளது. எவ்வளவு தூரத்தில் அது தங்கி இருக்க வாய்ப்புள்ளது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story