குட்டி யானையை தாயுடன் சேர்க்க வனத்துறையினர் தீவிரம்


குட்டி யானையை தாயுடன் சேர்க்க வனத்துறையினர் தீவிரம்
x

மசினகுடி அருகே வெள்ளத்தில் சிக்கிய குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர். தொடர்ந்து அந்த யானையை தாய் யானையுடன் சேர்ப்பதற்காக தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி

கூடலூர்,

மசினகுடி அருகே வெள்ளத்தில் சிக்கிய குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர். தொடர்ந்து அந்த யானையை தாய் யானையுடன் சேர்ப்பதற்காக தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குட்டி யானை மீட்பு

மசினகுடி அருகே நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது வாழைத்தோட்டம் அருகே சீகூர்ஹல்லா ஆற்று வெள்ளத்தில் சிக்கி குட்டி யானை ஒன்று தவித்தது. தகவல் அறிந்த சிங்காரா வனத்துறையினர் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குட்டி யானையை பாதுகாப்பாக மீட்டனர். தொடர்ந்து குட்டியை தாயுடன் சேர்ப்பதற்காக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், தாய் காட்டு யானையை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து குட்டி யானையை வனத்துறையினர் பாதுகாப்பாக வைத்திருந்தனர். இதற்கிடையே சீகூர் வனப்பகுதியில் தனியாக பெண் காட்டு யானை நிற்பதாக வன ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு குட்டியை அப்பகுதிக்கு அழைத்துச் சென்று பெண் யானையின் அருகில் அனுப்பி வைத்தனர்.

தேடும் பணி தீவிரம்

பின்னர் அங்கிருந்து வனத்துறையினர் சென்றனர். இந்தநிலையில் குட்டி யானை மற்றும் காட்டு யானை நடமாட்டத்தை நேற்று கண்காணிக்க வனத்துறையினர் சென்றனர். அப்போது குட்டி யானை தனியாக ஒரு மரத்தின் அடியில் நின்று கொண்டு இருந்தது. ஆனால் காட்டு யானையை காணவில்லை. மேலும் சோர்வாக இருந்த குட்டி யானைக்கு வனத்துறையினர் குளுக்கோஸ், இளநீர் உள்ளிட்ட திரவ உணவுகளை வழங்கினர். இதைத்தொடர்ந்து குட்டி யானை சுறுசுறுப்பாக காணப்பட்டது.

தொடர்ந்து தாய் காட்டு யானையை தேடும் பணியில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தலைமையில் துணை இயக்குநர் அருண்குமார், வனச்சரகர் முரளி உள்ளிட்ட வனத்துறையினர் 2-வது நாளாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



Next Story