மதுரையில் வீட்டில் வளர்த்த யானையை மீட்ட வனத்துறையினர் -திருச்சி முகாமுக்கு அனுப்பி வைப்பு
மதுரையில் வீட்டில் வளர்த்து வந்த யானை மீட்கப்பட்டு, திருச்சி முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மதுரையில் வீட்டில் வளர்த்து வந்த யானை மீட்கப்பட்டு, திருச்சி முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கேரளாவில் இருந்து வாங்கியது
மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் விமலன். இவர்25 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் இருந்து பெண் யானை ஒன்றை விலைக்கு வாங்கினார். அந்த யானைக்கு சுமதி என்று பெயர் வைத்து அரசின் அனுமதியுடன் உத்தங்குடி பகுதியில் ஒரு வீட்டில் வளர்த்து வந்தார். அந்த யானைக்கு தற்போது58 வயதாகிறது.
இந்த நிலையில் அந்த வளர்ப்பு யானையை பல்வேறு செயல்களில் ஈடுபடுத்தியதாக புகார் எழுந்தது. எனவே யானையை வெளியே எங்கும் கொண்டு செல்லக்கூடாது என்று வனத்துறையினர் கட்டுப்பாடு விதித்து இருந்தனர். அதையும் மீறி சில மாதங்களுக்கு முன்பு அனுமதியின்றி ராமநாதபுரத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சிக்காக அந்த யானை கொண்டு செல்லப்பட்டதாகவும், இதுகுறித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே வனத்துறையில் சுமதி யானைக்கான லைசென்சை புதுப்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
சுமதி யானை மீட்பு
இந்நிலையில் யானையை வளர்க்க உரிய உரிமம் இல்லாமல் இருப்பதும், யானையை ஒழுங்காக பராமரிக்கவில்லை என்றும் கூறி ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து யானையை மீட்டு திருச்சியில் உள்ள யானைகள் பாதுகாப்பு முகாமுக்கு அனுப்பி வைக்குமாறு கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட வன அதிகாரி குருசாமி டோப்ளா, வனச்சரகர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் நேற்று காலை உத்தங்குடி சென்றனர்.
அந்த வளர்ப்பு யானை சுமதியை, கோர்ட்டு உத்தரவுப்படி மீட்டனர். பின்னர் லாரியில் ஏற்றி திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் பாதுகாப்பு முகாமுக்கு அனுப்பி வைத்தனர். மதுரையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போன்று ரூபாளி என்ற யானையை வனத்துறையினர் மீட்டது குறிப்பிடத்தக்கது.
தொடரும் சர்ச்சைகள்
மதுரையில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு திருமணவிழா வரவேற்புக்கு 2 ஆண் யானைகள் பயன்படுத்தப்பட்டன. அரசின் அனுமதியின்றி இந்த யானைகள் எவ்வாறு மதுரைக்கு அழைத்து வரப்பட்டது? என்று கேட்டு சமூகஆர்வலர் ஒருவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரம் பெற்றார். அப்போது அந்த 2 ஆண் யானைகள் கேரளாவில் இருந்து, மதுரையில் நடந்த கஜபூஜைக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த யானைகள் கஜபூஜை என்ற பெயரில், அந்த திருமண விழாவில் வரவேற்பில் பங்கேற்றது தெரியவந்தது. இவ்வாறு மதுரையில் வளர்ப்பு யானைகள் தொடர்பான சர்ச்சைகள் தொடருகின்றன.