உடன்குடி பேரூராட்சி முன்னாள் தலைவி கைது
தூய்மை பணியாளர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் உடன்குடி பேரூராட்சி முன்னாள் தலைவி கைது செய்யப்பட்டார்.
திருச்செந்தூர்:
தூய்மை பணியாளர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் உடன்குடி பேரூராட்சி முன்னாள் தலைவி கைது செய்யப்பட்டார்.
தூய்மை பணியாளர் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் சுடலைமாடன் (வயது 54). சம்பவத்தன்று இவரை பேரூராட்சி செயல் அலுவலர் பாபு முன்னிலையில் பேரூராட்சி முன்னாள் தலைவி ஆயிஷா கல்லாசி சாதி பெயரை சொல்லி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுடலைமாடன் கடந்த மாதம் விஷம் குடித்து தற்ெகாலை செய்து ெகாண்டார்.
உறவினர்கள் போராட்டம்
இதுதொடர்பாக ஆயிஷா கல்லாசி, பாபு ஆகியோர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும், தற்கொலைக்கு தூண்டியதாகவும் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சுடலைமாடனின் உறவினர்களும், தூய்மை பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைது
இதையடுத்து ஆயிஷா கல்லாசி, பாபு ஆகியோரை திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையிலான போலீசார் தேடி வந்தனர். அவர்கள் நேற்று ரோந்து சென்றபோது, அடைக்கலாபுரம் பஸ் நிறுத்தத்தில் ஆயிஷா கல்லாசியை கைது செய்தனர்.
பின்னர் அவரை தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து சென்றனர். தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், உடல் நலம் சரியில்லாததால் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பரபரப்பு
இந்த வழக்கில் தொடர்புடைய பாபுவை போலீசார் தேடி வருகின்றனர். தூய்மை பணியாளரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் பேரூராட்சி முன்னாள் தலைவி கைது செய்யப்பட்ட சம்பவம் உடன்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.