தூத்துக்குடியில் முதல்-அமைச்சர் கோப்பைக்கானவிளையாட்டு போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கியது
தூத்துக்குடியில் முதல்-அமைச்சர் கோப்பைக்கானவிளையாட்டு போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் நான்காயிரம் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன் நேற்று காலையில் தொடங்கி வைத்தார். இதில் 4 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.
விளையாட்டு போட்டி
2022-23-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடக்கிறது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய 5 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் தொடக்கவிழா நேற்று காலையில் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். உதவி கலெக்டர் கவுரவ்குமார், பயிற்சி கலெக்டர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ்.அந்தோணி அதிஷ்டராஜ் வரவேற்று பேசினார். விழாவில் உடற்கல்வி ஆய்வாளர் கண்ணதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தடகளம்
தொடர்ந்து மாவட்ட அளவிலான தடகள போட்டிகள், நீச்சல், இறகுபந்து, கபடி, கூடைப்பந்து, கைப்பந்து, மேஜைப்பந்து மற்றும் மாணவிகளுக்கான ஆக்கி போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. மாணவர்களுக்கான ஆக்கி போட்டிகள் கோவில்பட்டி ஆக்கி விளையாட்டு மைதானத்திலும் நடந்தது. இந்த போட்டிகளில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 4 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இந்த போட்டிகள் இன்றும் (வெள்ளிக்கிழமை) தொடர்ந்து நடக்கிறது. இதன் தொடர்ச்சியாக கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் அரசு அறிவிப்புக்கு ஏற்ப அடுத்தடுத்து நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.