நாகூர் தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
நாகூர் தர்காவில் கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 2-ந் தேதி(திங்கட்கிழமை) சந்தனக்கூடு ஊர்வலம் நடக்கிறது.
நாகூர்:
நாகூர் தர்காவில் கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 2-ந் தேதி(திங்கட்கிழமை) சந்தனக்கூடு ஊர்வலம் நடக்கிறது.
கந்தூரி விழா
நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் வந்து பிரார்த்தனை செய்கிறார்கள். மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு 466-வது ஆண்டாக கந்தூரி விழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு நேற்று இரவு கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி நாகை மீரா பள்ளிவாசலில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தில் மந்திரி கப்பல், செட்டி பல்லக்கு, சின்ன ரதம் என ஏராளமான அலங்கார வாகனங்கள் இடம் பெற்றிருந்தன.
5 மினராக்களில் கொடியேற்றப்பட்டது
கப்பல் போன்று அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் மின்னொளியில் ஜொலித்தன. அலங்கார வாகனங்கள் நாகை நகரில் பல்வேறு வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நாகூர் தர்கா அலங்கார வாசலை சென்றடைந்தது.தொடர்ந்து நாகூர் தர்காவில் உள்ள 5 மினராக்களுக்கும் கந்தூரி விழா கொடிகள் கொண்டு செல்லப்பட்டன. அப்போது தர்கா பரம்பரை கலிபா துவா ஓதினார். இதையடுத்து மின்னொளியில் ஜொலித்த தர்காவின் 5 மினராக்களிலும் ஒரே நேரத்தில் கொடியேற்றப்பட்டது. இதையொட்டி வாணவேடிக்கை நடந்தது.
ஏற்பாடுகள்
கந்தூரி விழா கொடியேற்று நிகழ்ச்சியில் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை தர்கா மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் செய்யது காமில் சாஹிப் தலைமையில் பரம்பரை டிரஸ்டிகள் செய்திருந்தனர்.
சந்தனக்கூடு ஊர்வலம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 2-ந் தேதி(திங்கட்கிழமை) நடக்கிறது. ஊர்வலத்தின் முடிவில் பெரிய ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சி 3-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வரை நடக்கிறது.கொடியேற்று நிகழ்ச்சியையொட்டி நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.