காதல் திருமணம் செய்த மாணவியை தாக்கி காரில் கடத்திச்சென்ற கும்பல்


காதல் திருமணம் செய்த மாணவியை தாக்கி காரில் கடத்திச்சென்ற கும்பல்
x

கூடங்குளம் அருகே காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவியை ஒரு கும்பல் தாக்கி காரில் கடத்திச்சென்றது. இதுதொடர்பாக அவரது பெற்றோர் உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

கூடங்குளம்:

கூடங்குளம் அருகே காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவியை ஒரு கும்பல் தாக்கி காரில் கடத்திச்சென்றது. இதுதொடர்பாக அவரது பெற்றோர் உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கல்லூரி மாணவி

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஸ்ரீரெங்கநாராயணபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த தங்கராஜா-சுகந்தி தம்பதியரின் மகன் முருகன் (வயது 24). டிப்ளமோ படித்துள்ள இவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த முருகேசன்-பத்மா தம்பதியரின் மகள் சுமிகா (வயது 19). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். முருகன், சுமிகா இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் தெரியவரவே அதற்கு சுமிகாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருமணம்

கடந்த மாதம் 18-ந்தேதி காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். அவர்கள் சென்னையில் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சுமிகாவின் தந்தை முருகேசன் தனது மகளை காணவில்லை என்று கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் முருகேசன் தனது மகளை கண்டுபிடித்து தருமாறு மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதையடுத்து முருகன், சுமிகா இருவரையும் போலீசார் மீட்டு மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர்கள், தாங்கள் திருமணம் செய்து விட்டதாக வாக்குமூலம் அளித்து சேர்ந்து வாழ்வதாக தெரிவித்தனர்.

தாக்கி கடத்தல்

இதையடுத்து முருகன், சுமிகா இருவரும் கூடங்குளத்தில் வீடு எடுத்து தங்கியிருந்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு அவர்கள் ஸ்ரீரெங்கநாராயணபுரத்தில் உள்ள வீட்டுக்கு வந்தனர். இதை அறிந்த சுமிகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்து சுமிகாவை தாக்கி இழுத்து சென்று காரில் ஏற்றி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. அதை தடுத்த முருகனின் பெற்றோரை அவர்கள் அவதூறாக பேசி தாக்கியதாகவும் தெரிகிறது.

இதுகுறித்து முருகன் கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சுமிகாவின் தந்தை முருகேசன், தாய் பத்மா உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை தேடி வருவதுடன் சுமிகாவை மீட்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

பரபரப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தை சேர்ந்த வினித்தை தாக்கி அவரது காதல் மனைவி குருத்திகா கடத்தி செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோன்று தற்போது கூடங்குளம் அருகே நடந்த இந்த கடத்தல் சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story