ஊராட்சி மன்ற அலுவலகத்தை சூறையாடிய கும்பல்
மயிலாடும்பாறையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை மர்மகும்பல் சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மயிலாடும்பாறை ஊராட்சி மன்ற தலைவராக பார்வதி அன்பில் சுந்தரம் இருந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை அன்று இரவு மர்ம கும்பல், ஊராட்சி மன்ற அலுவலக கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தது. பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து சூறையாடிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதற்கிடையே நேற்று காலை வழக்கம்போல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு தலைவர் பார்வதி அன்பில் சுந்தரம் சென்றார். அப்போது அலுவலக பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததுடன், உள்ளே மேஜை, நாற்காலிகள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் மர்மநபர்கள் மது போதையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் மயிலாடும்பாறையை சேர்ந்த 15 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊராட்சி மன்ற அலுவலகம் சூறையாடப்பட்ட சம்பவம் மயிலாடும்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.