கார், இருசக்கர வாகனங்களை அடித்து உடைத்த கும்பல்
முத்துப்பேட்டை அருகே முன்விரோதத்தில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த கார், இருசக்கர வாகனங்களை ஒரு கும்பல் அடித்து உடைத்தது. இதுதொடர்பாக 9 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அருகே முன்விரோதத்தில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த கார், இருசக்கர வாகனங்களை ஒரு கும்பல் அடித்து உடைத்தது. இதுதொடர்பாக 9 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
முன்விரோதம்
முத்துப்பேட்டையை அடுத்த கீழவாடியக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது60). இவருடைய மகன் மனோகரன். இவர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு முன்விரோதம் காரணமாக மனோகரனை தாக்க அப்பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் அவரது வீட்டிற்கு சென்றுள்ளது.
கார், இருசக்கர வாகனங்கள் உடைப்பு
இதை பார்த்த அவர் தனது வீட்டுக்குள் சென்று கதவை மூடிக் கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார், மூன்று இருசக்கர வாகனங்கள், வீட்டின் ஜன்னல் கண்ணாடி மற்றும் இதர பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர். அப்போது சத்தம் கேட்டு மாடியில் இருந்து கீழே வந்த மனோகரனின் தந்தை ஆறுமுகத்தை அவர்கள் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
9 பேருக்கு வலைவீச்சு
இதுகுறித்து ஆறுமுகம் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே ஊரை சேர்ந்த மூர்த்தி என்கிற பாலகிருஷ்ணன், அஜித், நந்தகுமார், ஸ்ரீராம் உள்பட 9 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.