நகராட்சி தற்காலிக ஊழியர்களை பொது மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்


நகராட்சி தற்காலிக ஊழியர்களை பொது மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்
x

திருப்பத்தூரில் வீடுவீடாக சென்று அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களை சேகரித்த நகராட்சி தற்காலிக ஊழியர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

விவரம் சேகரிப்பு

திருப்பத்தூர் டவுன் ஆரிப் நகர் பகுதியில் நகராட்சி தற்காலிக ஊழியர்கள் 10 பேர் வீடு வீடாகச் சென்று வீட்டில் உள்ளவர்களிடம் பெயர் விவரம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகல் கேட்டுள்ளனர். அடையாள அட்டை நகல் இல்லாதவரிடம் செல்போனில் அவரையும் சேர்த்து புகைப்படம் எடுத்து வந்துள்ளனர்.

அந்த பகுதி முஸ்லிம்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் நீங்கள் யார்? எதற்காக வாக்காளர் அடையாள அட்டை மற்றும் போட்டோ எடுக்கிறீர்கள் எனக்கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் நாங்கள் நகராட்சி ஊழியர்கள் என்றும், நகராட்சி தலைவர் அனுப்பியதாகவும், பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்காக விவரங்களை சேகரிக்க வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

வாக்குவாதம்

ஆனாலும் பொதுமக்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்தப்பகுதி மக்கள் டவுன் போலீஸ் நிலையத்துக்கும் இதுபற்றி தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த டவுன் போலீசார் நகராட்சி ஊழியர்களிடம் விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர்.

இதேபோன்று திருப்பத்தூர் புதுப்பேட்டை தெரு லட்சுமி அம்மா தெருவிலும் வீடு வீடாக விவரங்களை சேகரித்த போது பொதுமக்கள் எதற்காக கேட்கிறீர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அ.தி.மு.க. நகர செயலாளர் டி.டி.குமார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story