தற்கொலைக்கு முயன்ற சிறுமி...விசாரணையில் வெளிவந்த உண்மை - ஆசிரியர் போக்சோவில் கைது...!


தற்கொலைக்கு முயன்ற சிறுமி...விசாரணையில் வெளிவந்த உண்மை - ஆசிரியர் போக்சோவில் கைது...!
x

கரூர் அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

கரூர்,

கரூர் அருகே உள்ள புலியூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த மாணவி தனது வீட்டில் தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து பெற்றோர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அவளிடம் விசாரித்தனர். விசாரணையில், மாணவி படிக்கும் அதே பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வரும் தாந்தோணிமலையை சேர்ந்த பாபு (வயது 47) என்பவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பாபுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story