ஆஸ்பத்திரியில் சிறுமி அனுமதி
ஆஸ்பத்திரியில் சிறுமி அனுமதிக்கப்பட்டு நிலையில் பெற்றோர் எங்கே? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலங்குளம்:
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த 2018-ம் ஆண்டு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இவர்களது திருமணம் பெற்றோருக்கு பிடிக்காத நிலையில் வெளியூர்களில் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். இந்த தம்பதிக்கு 3 வயது ஒரு மகள் இருக்கிறாள். இந்த நிலையில் பிழைப்பு தேடி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆலங்குளத்திற்கு வந்தனர். ஆலங்குளம் அண்ணாநகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தனர்.
இதில் அந்த வாலிபர் காய்கனி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகவும், அவருடைய மனைவி ஜவுளிக்கடையிலும் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில் அந்த சிறுமி கடந்த 31-ந் தேதி வீட்டில் தவறி விழுந்ததாகக் கூறி ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் பெற்றோர் அனுமதித்தனர். குழந்தைக்கு சுய நினைவின்றி காணப்பட்டதால் முதலுதவிக்கு பின்னர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் தீவிர சிகிச்சைப பிரிவில் அனுமதிக்கப்பட்டாள். இதற்கிடையே அந்த சிறுமியை தந்தை அடித்து துன்புறுத்தியதாக அக்கம்பக்கத்தினர் பேசினர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில் பெற்றோர் இருவரும் மருத்துவமனையில் இருந்து நேற்று தலைமறைவாகி விட்டனர். ஆலங்குளம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.