பொதுமக்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த சிறுமி சாவு


பொதுமக்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த சிறுமி சாவு
x

புதுக்கோட்டை அருகே கோவில்களில் திருடியதாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை பொதுமக்கள் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த 10 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

புதுக்கோட்டை

6 பேர் படுகாயம்

புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளனூர் பகுதியில் சாலையோரங்களில் உள்ள கோவில்களில் பொருட்களை ஒரு கும்பல் திருடிவிட்டு ஆட்டோவில் தப்பிச்செல்வதாக கடந்த 14-ந் தேதி அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்றனர். புதுக்கோட்டை அருகே மச்சுவாடி பகுதியில் அந்த ஆட்டோவை வழிமறித்து அதில் இருந்தவர்களை கைகள், கட்டைகளால் சரமாரியாக தாக்கினர்.

இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் காயமடைந்தவர்கள் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த சத்தியநாராயணசாமி (வயது 48), அவரது மனைவி லில்லி புஷ்பா (38) மற்றும் அவரது மகன்கள் விக்னேஷ்வரசாமி (19), சுபமெய்யசாமி (19), மகள்கள் கற்பகாம்பிகா (10), ஆதிலட்சுமி (8) ஆகியோர் என தெரியவந்தது. இதில் கற்பகாம்பிகா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிறுமி சாவு

இதற்கிடையில் கிள்ளனூர், வாலியம்பட்டி, ஆவுடையாம்பட்டி ஆகிய ஊர்களில் கோவில்களில் அம்மன் தங்கப்பொட்டு 2, வெள்ளி காப்பு 2, விளக்கு உள்ளிட்ட பொருட்கள் திருடுப்போனதாக உடையாளிப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் திருடியவர்கள் அடையாளம் தெரியாத நபர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து போலீசார் புலன்விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பொருட்களை சத்தியநாராயணசாமி குடும்பத்தினர் ஆட்டோவில் வந்து திருடியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி தர்ம அடி கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கற்பகாம்பிகா நேற்று மாலை 6.40 மணியளவில் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சையில் இருந்த சிறுமி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கைது செய்ய நடவடிக்கை

சிறுமி உள்பட 6 பேரும் காயமடைந்த போது லில்லி புஷ்பா கணேஷ்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில் தங்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தெரிவித்திருந்தார். அதன்பேரில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி இறந்த நிலையில் இந்த சம்பவத்தில் அவர்களை தாக்கிய நபர்களை பிடிக்க கணேஷ்நகர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்வது குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர். அவர்களை தாக்கியவர்களை கைது செய்ய சம்பவத்தன்று வெளியான வீடியோவை வைத்து அதில் உள்ள நபர்களை பிடித்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

தகராறு

மகள் இறந்த சம்பவம் குறித்து லில்லி புஷ்பா கணேஷ்நகர் போலீசில் அளித்த புகாரில் ''நானும், எனது கணவரும் குடும்பத்தோடு பெருமாள் கோவில்களுக்கு தரிசனத்திற்கு செல்வதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து ஆட்டோவில் புறப்பட்டு வந்தோம். சம்பவத்தன்று கிள்ளனூர் பகுதியில் கோவிலுக்கு செல்ல அங்கிருந்தவர்களிடம் எனது கணவர்வழி கேட்ட போது, நான் கழிவறை பக்கம் சென்றிருந்தேன். அப்போது அங்கிருந்த 3 பேர் என்னிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனை கண்ட எனது கணவர் மற்றும் மகன்கள் வந்து தட்டிக்கேட்டனர். அப்போது அங்கிருந்தவர்கள் எங்களை தாக்கினர்.

நாங்கள் ஆட்டோவில் புதுக்கோட்டை நோக்கி வந்த போது வழிமறித்து கை, கம்புகள், கற்களால் தாக்கினர். இதில் நாங்கள் காயமடைந்தோம். எங்கள் மீது கொலைமுயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவித்திருந்தார்.

கைது செய்ய நடவடிக்கை

இதனால் இவர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டார்களா? கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றது உண்மைதானா? என ஒருபுறம் விசாரிக்கின்றனர். அதேநேரத்தில் பொதுமக்கள் தாக்கியதில் ஒரு சிறுமி இறந்த நிலையில், அதில் தொடர்புடையவர்களை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story