மாமியார் வீட்டில் திருடிய பெண் சிக்கினார்
உவரி அருகே மாமியார் வீட்டில் திருடிய பெண் சிக்கினார்.
திசையன்விளை:
உவரி அருகே தத்துவநேரி தெற்கு தெருவை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி பூபதி (வயது 52). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணம் ஆன இவர்கள் ஒரே காம்பவுண்டில் உள்ள மூன்று வீடுகளில் தனித்தனியே வசித்து வருகின்றனர். கடந்த 26-ந் தேதி கணேசனும், அவரது மனைவியும் கூலி வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தனர். அப்போது அவரது வீட்டு கதவும், 2-வது மகன் வீட்டு கதவும் திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பூபதி வீட்டில் பீரோவில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகையும், மகன் வினோத் வீட்டில் இருந்த 2½ பவுன் நகை, ரொக்கம் ரூ.2 ஆயிரமும் திருடு போனது தெரியவந்தது. யாரோ மர்ம நபர் திருடி சென்றுவிட்டதாக பூபதி உவரி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் பூபதியின் 2-வது மகன் வினோத் மனைவி ஜெயக்கொடி (24) திருடியது தெரியவந்தது. போலீசார் நேற்று அவரை கைது செய்து, நகைகளையும் மீட்டனர்.