கடலில் பாலம் அமைக்கும் பணியை அடுத்த ஆண்டுக்குள் முடிக்க இலக்கு


கடலில் பாலம் அமைக்கும் பணியை அடுத்த ஆண்டுக்குள் முடிக்க இலக்கு
x

கன்னியாகுமரி கடலின் நடுவே விவேகானந்தர் மண்டபம்-திருவள்ளுவர் சிலைக்கும் இடையே பாலம் அமைக்கும் பணியை அடுத்த ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு தலைவர் ராமகிருஷ்ணன் கூறினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

கன்னியாகுமரி கடலின் நடுவே விவேகானந்தர் மண்டபம்-திருவள்ளுவர் சிலைக்கும் இடையே பாலம் அமைக்கும் பணியை அடுத்த ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு தலைவர் ராமகிருஷ்ணன் கூறினார்.

ஆய்வுக்கூட்டம்

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழு ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏடுகள் ஆய்வுக் குழு தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட கலெக்டர் அரவிந்த், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் அமலு (குடியாத்தம்), நல்லதம்பி (கங்கவள்ளி), தேன்மொழி (நிலக்கோட்டை), வேலு (மயிலாப்பூர்), எம்.ஆர்.காந்தி (நாகர்கோவில்), நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை முன்வைக்கப்பட்ட ஏடுகள் குழு தலைவர் ராமகிருஷ்ணன் துறை அதிகாரிகளிடம் ஆய்வு மேற்கொண்டு பேசியதாவது:-

லாப நோக்கில்...

அரசு ரப்பர் கழகம் தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கிவரும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று. அரசு ரப்பர் கழகத்தின் மூலதனம் ரூ.13.07 கோடி தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் உரிய காலத்திற்கு முன்னதாகவே ஆண்டறிக்கை தயார் செய்து பேரவையில் வைத்து ஒப்புதல் பெற உரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு, அரசு ரப்பர் கழகம் தொடர்ந்து லாப நோக்கில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென துறைசார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தினரால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இடையே மூன்று படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக 2 புதிய படகுகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாகர்மாலா திட்டத்தின் கீழ் விவேகானந்தர் பாறையில் உள்ள கப்பல் அணையும் தளம் விரிவாக்கம், ரூ.20 கோடி செலவில் அதிக சுற்றுலா பயணிளை ஈர்க்கும் வகையில் பொதுப்பணித்துறையினரால் மேற்கொண்டு வருகிறது. ரூ.37 கோடியில் விவேகானந்தர் மண்டபம்-திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கடல் பாலம் அமைக்கும் பணி நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிகளை 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடித்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ரப்பர் தோட்டத்தில் ஆய்வு

முன்னதாக கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏடுகள் குழு தலைவர் ராமகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார். இதையடுத்து இந்த குழுவினர் கீரிப்பாறையில் ரப்பர் தோட்டத்தையும், அரசு ரப்பர் கழக ரப்பர் தொழிற்சாலையையும் ஆய்வு செய்தது.

ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, மாவட்ட வன அதிகாரி இளையராஜா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இணை செயலாளர் பூபாலன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், திட்ட இயக்குனர்கள் தனபதி (ஊரக வளர்ச்சி முகமை), மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ (மகளிர் திட்டம்), நாகர்கோவில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருப்பதி, உசூர் மேலாளர் கண்ணன் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story