மினி லாரி கவிழ்ந்து 30 ஆடுகள் செத்தன
குருபரப்பள்ளி அருகே மினி லாரி கவிழ்ந்த விபத்தில் 30 ஆடுகள் செத்தன. இடிபாடுகளில் சிக்கி டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
குருபரப்பள்ளி
குருபரப்பள்ளி அருகே மினி லாரி கவிழ்ந்த விபத்தில் 30 ஆடுகள் செத்தன. இடிபாடுகளில் சிக்கி டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
30 ஆடுகள் செத்தன
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் சங்கர் (வயது31). அதே பகுதியை சேர்ந்தவர்கள் நாகராஜ் (32), ரமேஷ் (31). ஆட்டு வியாபாரிகள். இவர்கள் மராட்டிய மாநிலத்தில் இருந்து 30 ஆடுகளை வாங்கி மினி லாரியில் ஏற்றி கொண்டு கிருஷ்ணகிரி வழியாக பாப்பாரப்பட்டிக்கு புறப்பட்டனர். இந்த மினி லாரியை டிரைவர் சங்கர் ஓட்டி வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே சோமநாதபுரம் மேம்பாலம் பகுதியில் மினி லாரி வந்து கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் சங்கர் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். மேலும் மினி லாரியில் இருந்த 30 ஆடுகளும் அடுத்தடுத்து துடிதுடித்து செத்தன.
போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்து காரணமாக ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் குருபரப்பள்ளி போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த சங்கர் உள்ளிட்ட 3 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து போலீசார் இறந்த ஆடுகள், லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.