இடிந்து விழும் நிலையில் அரசு கட்டிடம்
ஆற்காட்டில் இடிந்து விழும் நிலையில் அரசு கட்டிடம்
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள செய்யாறு சாலையில் கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களுக்கு தினசரி 50-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
இதன் அருகிலேயே சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டு பழுதடைந்து பயன்பாட்டில் இல்லாத துணை தாசில்தார் குடியிருப்பு கட்டிடம் உள்ளது.
இந்த கட்டிடம் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது.
பாழடைந்த இந்த கட்டிடம் பாம்பு மற்றும் விஷ ஜந்துக்களின் குடியிருப்பு பகுதியாக மாறியுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வரும் நபர்கள் தெரியாமல் இந்த பாழடைந்த கட்டிடத்தின் முன்பு மோட்டார் சைக்கிளை விடுவதும், அமர்ந்திருப்பதும் வாடிக்கையாக உள்ளது.
இந்தக் கட்டிடம் ஆபத்தான நிலையில் உள்ளது என்பதை உணர்த்த கட்டிடத்தின் முன்பு கடமைக்காக கயிறு கட்டி உள்ளனர்.
இந்த கட்டிடம் இடிந்து விழுந்து அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன் கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.