கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்க அரசு விரைந்து செயல்பட வேண்டும்-முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை பேட்டி


கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்க அரசு விரைந்து செயல்பட வேண்டும்-முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை பேட்டி
x

கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்க அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்று முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை கூறினார்.

திருநெல்வேலி

ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை கூடுதாழை கிராமத்துக்கு சென்று, கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து கூடுதாழை பங்குத்தந்தை வில்லியம்ஸ் அலுவலகத்தில் கிராம மக்களை சந்தித்து தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் இன்பதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

கூடுதாழை கிராமத்தில் கடல் அரிப்பு ஏற்பட்ட நாளில் இருந்து இதுவரை மீன்வளத்துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர் யாரும் வந்து இந்த மக்களை பார்க்கவில்லை. உடனடியாக மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு விரைந்து செயல்பட்டு தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கையின் போது இதுதொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கையில் மீனவர்கள் காத்திருக்கின்றனர்.

அ.தி.மு.க. ஆட்சியின்போது கூடுதாழைக்கு தூண்டில் வளைவு அமைக்க வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. அரசு அமைந்தது. தூத்துக்குடி மாவட்டம் கல்லாமொழியில் மின்உற்பத்தி நிலைய திட்டத்தை அரசு நிறைவேற்றி வருவதால் கடலில் நீர் அழுத்தம் ஏற்பட்டு அருகில் உள்ள கிராமமமான கூடுதாழை கிராமம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே தூண்டில் வளைவு அமைப்பதில் தாமதம் ஏற்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மூலம் சட்டமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானமும் கொடுத்துள்ளோம். இந்த பணிகளில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் அ.தி.மு.க. இந்த போராட்டத்தை கையில் எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கே.பி.கே.செல்வராஜ், அமலராஜா, திசையன்விளை பேரூராட்சி தலைவி ஜான்சிராணி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் அருண்குமார், பொதுக்குழு உறுப்பினர் செழியன், உவரி பவர்சிங், ரமேஷ், எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி சந்திரமோகன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story