இந்து கோவில் நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது; அர்ஜூன் சம்பத் பேட்டி
“இந்து கோவில் நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது” என அர்ஜூன் சம்பத் கூறினார்.
கயத்தாறு:
"இந்து கோவில் நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது" என அர்ஜூன் சம்பத் கூறினார்.
கொடியேற்று விழா
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் இந்து மக்கள் கட்சி கொடியேற்று விழா நடந்தது. விழாவிற்கு இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் மற்றும் நிறுவனர் அர்ஜூன் சம்பத் தலைமை தாங்கி கட்சிக் கொடி ஏற்றினார். பின்னர் அவர் கூறியதாவது:-
கயத்தாறு ஆத்திகுளம் பகுதியில் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அவற்றை மீட்க வேண்டும். அரசு மதச்சார்பற்றது. வக்பு வாரியம், கிறிஸ்தவ சபைகளில் அரசு தலையிட முடியாது. ஆனால் இந்து கோவில் நிர்வாகத்தில் மட்டும் அ.தி.மு.க., தி.மு.க. என எந்த அரசாக இருந்தாலும் தலையிடுகிறது. எனவே இந்து கோவில் நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது. இந்து கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்று 40 ஆண்டுகளாக போராட்டத்தை நடத்தி வருகிறோம்.
ஆக்கிரமிப்பு
தி.மு.க. அரசுக்கோ, அமைச்சர் சேகர்பாபுவிற்கோ எதிராக நாங்கள் பேசவில்லை. எங்கள் கோரிக்கையை வைக்கிறோம். கோவில் சொத்துக்கள் பல இடங்களில் ஆக்கிரமிப்பில் உள்ளன. குத்தகை வருவதில்லை. வாடகையும் வருவதில்லை. இதனால் உரிய வருவாயும் கிடைப்பதில்லை. அதனை முறையாக வசூலிக்க வேண்டும். கோவில் சொத்துகளை கோவில் வளர்ச்சி, பக்தர்களின் வசதிக்காக பயன்படுத்த வேண்டும்.
இதைத்தான் மதுரை ஆதீனம் வெளிப்படுத்தியுள்ளார். இதில் எவ்வித சர்ச்சையும் இல்லை. இந்துக்களின் குரலாக மதுரை ஆதீனம் பேசியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பாரத மாதா அமைப்பின் மாநில தலைவர் ராமகுணசீலன், இந்து மக்கள் கட்சி நெல்லை மாவட்ட தலைவர் முருகானந்தம், ஒன்றிய தலைவர் அறிமுருகன், கயத்தாறு ஒன்றிய செயலாளர் சுதீர், ஒன்றிய பொதுச் செயலாளர் கார்த்திக், ஒன்றிய துணை செயலாளர் செல்லத்துரை, மாவட்ட செயலாளர் உடையார், மாநில அமைப்புக்குழு தலைவர் செந்தில் உள்ளிட்ேடார் கலந்து கொண்டனர்.