விவசாயிகளிடம் அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்


விவசாயிகளிடம் அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 25 Nov 2022 12:15 AM IST (Updated: 25 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பரிசுக்கு தேவையான கரும்புகளை விவசாயிகளிடம் அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மயிலாடுதுறை

பொங்கல் பரிசுக்கு தேவையான கரும்புகளை விவசாயிகளிடம் அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் லலிதா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதன் விவரம் வருமாறு:-

ரவி: கனமழையால் பாதித்த மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம், வேலை இன்றி தவிக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.ஆயிரத்துக்கு பதிலாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

டெல்டா பாசனதாரர் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன்: கடந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் ரூ.150 கோடி பயிர் காப்பீட்டு தொகை செலுத்தப்பட்டது. ஆனால் காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டு தொகையாக ரூ.16 கோடி மட்டுமே வழங்கியுள்ளது. எனவே காப்பீட்டு வழங்கும் முறையை மாற்றி பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கால்நடை ஆஸ்பத்திரி

குத்தாலம் கல்யாணம்: குத்தாலம் தாலுகா திருவேள்வகுடி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் கால்நடை ஆஸ்பத்திரி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் கால்நடை ஆஸ்பத்திரி கட்டப்பட உள்ள இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. எனவே அரசுக்கு சொந்தமான மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்தி கால்நடை ஆஸ்பத்திரி கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமலிங்கம்: தூர்வாரப்பட்ட வாய்க்கால், ஆறுகளில் முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் மழை நீர் சரிவர வடியவில்லை. இதன் காரணமாக நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. முத்தப்பன் காவிரி வாய்க்காலில் மாப்படுகை பகுதியில் தடுப்பணை கட்டினால் அந்த பகுதி விவசாயத்திற்கு உதவியாக இருக்கும்.

அரசே நேரடியாக கொள்முதல்

சுகுமார்: பொங்கல் பரிசுக்கு தேவையான கரும்புகளை விவசாயிகளிடம் அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். கடந்த ஆண்டு ஒரு கரும்புக்கு ரூ.35 அறிவிக்கப்பட்டும் விவசாயிகளுக்கு ரூ.15 மட்டுமே கிடைத்தது. எனவே இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக அரசு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும்.

வேட்டங்குடி சீனிவாசன்: கொள்ளிடம் பகுதியில் பக்கிங்காங் கால்வாயில் மழை வெள்ளநீர் வடியும் வகையில் முகத்துவாரம் தூர்வாரப்பட வேண்டும். மேலும் அங்கு தடுப்பணையும் கட்ட வேண்டும்.

கலெக்டர்: விவசாயிகள் தெரிவித்த அனைத்து குறைகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், பொதுப்பணித்துறை காவிரி வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், வேளாண் இணை இயக்குனர் சேகர் உள்பட அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.


Next Story