தமிழ்நாட்டில் அரசியல் குழப்பத்தை கவர்னர் ஏற்படுத்தி வருகிறார்; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேட்டி


தமிழ்நாட்டில் அரசியல் குழப்பத்தை கவர்னர் ஏற்படுத்தி வருகிறார்; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேட்டி
x

தமிழ்நாட்டில் அரசியல் குழப்பத்தை கவர்னர் ஏற்படுத்தி வருகிறார் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கூறினார்.

திருச்சி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-

தமிழ்நாட்டில் தற்போது அரசியல் குழப்பதை தமிழக கவர்னர் ஏற்படுத்தி வருகிறார். தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய 14-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு இதுவரை அவர் ஒப்புதல் அளிக்கவில்லை. அவருக்கு உள்ள அதிகாரத்தின்படி இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஒப்புதல் அளிக்கலாம் அல்லது ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கலாம். ஆனால் கவர்னர் என்ன செய்கிறார்?. பொது இடங்களில் அது குறித்து பிரசாரம் செய்கிறார். குறிப்பாக பள்ளி, கல்லூரி விழாக்களில் மாணவர்கள் மத்தியில் அது பற்றி அரசியல் பேசி வருகிறார். இது அரசியல் சட்டத்துக்கு முரணானது மட்டுமல்ல. இதுவரை தமிழக வரலாற்றில் இல்லாத குழப்பமான நிலைமை. இதை கண்டிக்கும் விதமாக வருகிற 12-ந் தேதி அனைத்து கட்சிகள் சார்பில் கவர்னர் மாளிகை முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கலந்து கொள்ள இருக்கிறோம். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு, கவர்னரிடம் இருந்து மாற்றம் வருமா? அல்லது மத்திய அரசு அந்த மாற்றத்தை உருவாக்கி கடமையை செய்யுமா? அல்லது இந்த விவகாரத்தை அனைத்து கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்துக்கு எடுத்து செல்லக்கூடிய நிலை ஏற்படுமா? என்பது தெரிந்துவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story