மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு கவர்னர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்


மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு கவர்னர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
x
தினத்தந்தி 28 Nov 2022 12:15 AM IST (Updated: 28 Nov 2022 11:47 AM IST)
t-max-icont-min-icon

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு கவர்னர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று நாகையில், டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

நாகப்பட்டினம்

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு கவர்னர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று நாகையில், டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

பேட்டி

பா.ம.க தலைவர் டாக்டர் நாகையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசு தவறி விட்டதாக கருதுகிறோம்

தமிழகத்தில் அரையாண்டுகளில் பெய்யக்கூடிய மழை ஒரே நாளில் சீர்காழி, மயிலாடுதுறை பகுதியில் பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். பயிர் பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், பயிர் காப்பீடு மூலம் ஏக்கருக்கு ரூ.35 ஆயிரமும் வழங்க வேண்டும். இழப்பீடு வழங்கும் வகையில் காப்பீட்டு நிறுவனத்திற்கு தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். அதேபோல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.ஆயிரம் என்ற நிவாரணத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மழை பெய்வதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் அரசு தவறி விட்டதாகவே நாங்கள் கருதுகிறோம். கோடைகாலத்திலேயே நீர்நிலைகள் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்கொள்முதல் நிலையங்கள்

தற்போது சம்பா, தாளடி சாகுபடி நடந்து வருகிறது. குறுவை அறுவடைக்கு பின்னர் நெல் கொள்முதல் நிலையங்கள் முறையாக திறக்கப்படாததால் விவசாயிகள் தனியாரிடம் ரூ.800, 900 என்ற அளவில் நெல் மூட்டைகளை விற்பனை செய்து நஷ்டத்தை சந்தித்துள்ளனர். எனவே சம்பா அறுவடைக்கு பிறகு 100 என்ற அளவில் உள்ள கொள்முதல் நிலையங்களை 250 என்று உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும். முக்கியமாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய விவசாயிகளிடமே ரூ.40, 50 என்று லஞ்சம் வாங்கப்படுகிறது. விவசாயிகளிடம் லஞ்சம் வாங்குவது எவ்வளவு ஒரு பெரிய கொடுமை. இந்த கலாச்சாரத்தை முழுமையாக ஒழிக்க வேண்டும்.

மீனவர்களுக்கு இழப்பீடு

நாகை மாவட்டம் தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் இல்லாத நிலை போன்ற எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் தனித்தீவு போல் உள்ளது. கடல் நீர் உள்ளே புகுந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நாகை துறைமுகத்தை மேம்படுத்துவதுடன், கடல் உணவு மண்டலமாக உருவாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லைெயன்றால், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மத்திய அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

ரெயில்வே திட்டங்கள் புறக்கணிப்பு

டெல்டா மாவட்டங்களிலும் ெரயில்வே திட்டங்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளது. சென்னை-கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை ெரயில்வே திட்டம் முதல் கட்ட அனுமதியோடு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ெரயில்வே திட்டங்கள் நிறைவேற்றாததை கண்டித்து நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நாளை(அதாவது இன்று) நடைபெறும் போராட்டத்திற்கு பா.ம.க முழு ஆதரவு வழங்கும்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா

நீட் தேர்வு ரத்து, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூய திட்டம் செயல்படுத்துவது போன்ற எந்த வாக்குறுதிகளும் இந்த அரசால் நிறைவேற்றப்படவில்லை. ஆன்லைன் சூதாட்டம் தடை செய்வதற்கான சட்ட மசோதாவுக்கு கவர்னர் இதுவரை கையெழுத்திடவில்லை.

கடந்த ஓராண்டில் மட்டும் 32 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்துள்ளனர். இனி வரும் காலங்களில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு கவர்னரே பொறுப்பேற்க வேண்டும். எனவே இனியும் தாமதிக்காமல் உடனடியாக இந்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்க வேண்டும்.

கவர்னர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்

தமிழகத்தில் வருகிற 2026 சட்டசபை தேர்தலில் பா.ம.க தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளோம். அதற்கு முன்னோட்டமாக வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் வியூகங்கள் அமைக்கப்படும். முதல்-அமைச்சர், கவர்னர் ஒருமித்த கருத்தோடு செயல்பட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கவர்னர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story