அரசமைப்பு சட்டத்தை தொடர்ந்து அவமதிக்கும் கவர்னரை திரும்பப் பெற வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்


அரசமைப்பு சட்டத்தை தொடர்ந்து அவமதிக்கும் கவர்னரை திரும்பப் பெற வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்
x

அரசமைப்பு சட்டத்தை தொடர்ந்து அவமதிக்கும் கவர்னரை திரும்பப் பெற வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை,

ஆர்.என்.ரவி அரசியல் சாசன அடிப்படையிலான கவர்னர் பதவியில் நீடிக்க முற்றிலும் பொருத்தமற்றவர். அனைத்து அரசியல் கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி குரலெழுப்ப முன்வர வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவியை, குடியரசுத் தலைவர் உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் விதத்தில் கவர்னர்கள் அரசியல் ஆயுதமாகவும், ஆர்எஸ்எஸ்-இன் சித்தாந்த கருவியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாகவே தமிழ்நாடு கவர்னர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி வருகிறார்.

அண்மையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்வதாக அறிவித்து, பின்னர் நிறுத்தி வைத்திருப்பதாக ராஜ்பவன் அறிக்கைகள் கூறுகின்றன. முதலமைச்சரின் அறிவுரை இன்றி அமைச்சர்களை நியமிக்கவோ, பதவி நீக்கம் செய்யவோ கவர்னருக்கு அதிகாரம் இல்லை. எனவே செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்தது அரசியல் சாசனத்தை மீறும் செயல்.

தொடர்ந்து கவர்னரின் செயல்பாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் விவகாரங்களில் தலையிடுவதாகவும், அரசின் நிலைபாட்டுக்கு முரண்பட்டதாகவும், அரசியல் சாசன அதிகார வரம்பை மீறுவதாகவும் உள்ளது.

எனவே, ஆர்.என்.ரவி அரசியல் சாசன அடிப்படையிலான கவர்னர் பதவியில் நீடிக்க முற்றிலும் பொருத்தமற்றவர். குடியரசு தலைவர் உடனடியாக கவர்னரை திரும்ப பெற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி குரலெழுப்ப முன்வர வேண்டுமெனவும் சிபிஐ(எம்) கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story