பச்சை வால் நட்சத்திரத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம்
பச்சை வால் நட்சத்திரம் நாளை (புதன்கிழமை) வானில் தோன்றுகிறது. அதை வெறும் கண்ணால் பார்க்கலாம் கொடைக்கானல் வானியல் ஆராய்ச்சி விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் உள்ள வானியல் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி எபினேசர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சூரிய குடும்பத்தின் பரந்த வான்வெளியில் சிறிய மாற்றங்களை கூட கண்டறியும் ஜூவிகி என்ற தொலைநோக்கி மூலம், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் பச்சை நிற வால் நட்சத்திரம் வரவுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வால் நட்சத்திரம் கடந்த 12-ந்தேதி சூரியனை கடந்து வந்துள்ளது. இது, நாளை (புதன்கிழமை) பூமிக்கு மிக அருகாமையில் வரும். இந்த அறிய நிகழ்வை தொலைநோக்கியின் உதவி இல்லாமல் வெறும் கண்களால் அனைவரும் பார்க்கலாம்.
இதுகுறித்து நேற்று காலை விஞ்ஞானிகள் தொலைநோக்கிகளை வைத்து ஆய்வு செய்தனர். ஆனால் கொடைக்கானல் பகுதியில் நிலவிய மேகமூட்டம் காரணமாக அதனை பார்க்க இயலவில்லை. இருப்பினும் மேகமூட்டம் இல்லாத இடங்களில் நாளை அதிகாலை 4 மணி முதல் காலை 7 வரை வெறும் கண்ணால் வானில் தோன்றும் பச்சை நிற வால் நட்சத்திரத்தை பொதுமக்கள் பார்த்து ரசிக்கலாம். மேலும் விஞ்ஞானிகள, வால் நட்சத்திரத்தை படம்பிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் வால் நட்சத்திரம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.