சொத்தவிளை கடற்கரை சாலையில் கொடூரம்: காவலாளி கத்தியால் குத்தி படுகொலை


சொத்தவிளை கடற்கரை சாலையில் கொடூரம்: காவலாளி கத்தியால் குத்தி படுகொலை
x

நாகர்கோவிலில் மாயமானதாக தேடப்பட்ட காவலாளி சொத்தவிளை கடற்கரை சாலையில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்ற ஆசாமியை போலீஸ் தேடுகிறது.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்:

நாகர்கோவிலில் மாயமானதாக தேடப்பட்ட காவலாளி சொத்தவிளை கடற்கரை சாலையில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்ற ஆசாமியை போலீஸ் தேடுகிறது.

கத்திக்குத்து காயத்துடன் ஆண் பிணம்

நாகர்கோவில் அருகே சொத்தவிளையில் உள்ள கடற்கரை சாலையில் நேற்று மாலையில் கத்திக்குத்து காயங்களுடன் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. குடல் சரிந்த நிலையிலும், மார்பு, வயிறு உள்ளிட்ட பல இடங்களிலும் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.

ஆடு மேய்க்க சென்ற பெண் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இந்த சம்பவம் காட்டுத் தீயாய் பரவியது. இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சதாசிவம் சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

போலீஸ் விசாரணை

உடனே போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராபர்ட் செல்வசிங், ரவிசந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

கொலை செய்யப்பட்டவர் சட்டை, ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். சட்டை பையில் அடையாள அட்டை மற்றும் செல்போன் இருந்தது. அருகில் செருப்பும் கிடந்தது. தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு கைரேகை ஏதேனும் பதிவாகியிருக்கிறதா? என சோதனை நடத்தப்பட்டது. மேலும் மோப்பநாய் சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

பிறகு கொலை செய்யப்பட்டவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

கொலையானவர் காவலாளி

அடையாள அட்டை மற்றும் செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரித்ததில் கொலை செய்யப்பட்டவர் நாகர்கோவில் கணேசபுரம் என்.வி.தெருவை சேர்ந்த முருகன் (வயது 45) என்பது தெரியவந்தது.

இவருடைய மனைவி ராதா (42). இவர்களது மகள்கள் அனுஸ்ரீ (10), சுபஸ்ரீ (9) ஆகியோர் பள்ளியில் 5-ம் வகுப்பும், 4-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

முருகன் மனைவி ராதாவின் சொந்த ஊர் தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஆகும். கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. தனியார் நிறுவனத்தில் முருகன் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். மேலும் அவர் சில சமயங்களில் புகைப்பட கலைஞர் பணிக்கும் சென்று வந்துள்ளார்.

மாயமான நிலையில் பிணமாக மீட்பு

இந்தநிலையில் கடந்த 15-ந் தேதி மாலை 3½ மணிக்கு பிறகு முருகன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு அவர் வீட்டுக்கு வரவில்லை. இரவில் ஒரு தடவை மட்டும் மனைவியுடன் பேசியதை தொடர்ந்து முருகனின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது.

இதனால் பதற்றமடைந்த ராதா பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய விவரம் தெரியாததால் மறுநாள் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்தநிலையில் நேற்று மாலையில் முருகன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். ஆனால் அவரை தீர்த்துக் கட்டியது யார்? என்று தெரியவில்லை.

15-ந் தேதி அன்று முருகனை ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். அந்த நபரின் செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அவரை பிடித்து விசாரணை நடத்தினால் முருகன் கொலைக்கான காரணமும், கொலை செய்யப்பட்டது எப்படி? என்ற விவரமும் தெரியவரும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், முருகனின் மனைவியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

கண்காணிப்பு கேமரா ஆய்வு

அதே சமயத்தில் கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஏதேனும் காட்சி பதிவாகி உள்ளதா? எனவும் போலீசார் ஆய்வு செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து முருகன் கொலையில் துப்பு துலக்க பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.


Next Story