லாரியில் ஏற்றிச்செல்லப்பட்ட வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது
திருக்காட்டுப்பள்ளி அருகே லாரியில் ஏற்றிச்செல்லப்பட்ட வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது.
திருக்காட்டுப்பள்ளி அருகே லாரியில் ஏற்றிச்செல்லப்பட்ட வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது.
முன்பட்ட குறுவை அறுவடை
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மூலம் முன்பட்ட குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். தற்போது கோடைகாலம் போல் வெயில் கொளுத்துவதால் அறுவடை செய்த நெல்லை தனியார் வியாபாரிகள் வயல்வெளியிலேயே வந்து விலைபேசி வாங்கிச் செல்கின்றனர்.
அதேபோல எந்திரங்கள் மூலம் அறுவடை செய்யப்படும் வயல்களில் வைக்கோலை எந்திரம் மூலம் கட்டப்பட்டு விறுவிறுப்பாக விற்பனை நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பிள்ளை வாய்க்கால் கரையோரத்தில் முல்லைக்குடி கிராமம் அருகே வயல்வெளியில் வைக்கப்பட்டிருந்த வைக்கோலை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
வைக்கோல் தீப்பற்றி எரிந்தது
அப்போது வயல்வெளிகளில் குறுக்கே செல்லும் மின் கம்பிகளில் உரசியதில் வைக்கோல் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட தீயணைப்பு நிலைய உதவி அதிகாரி கணேசன் தலைமையில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் புருஷோத்தமன், ஆரோக்கியசாமி மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இதில் லாரி டிரைவர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த குமரவேல் (46) என்பவர் தீக்காயம் அடைந்தார். அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.