ஆடியில் ஆட்டம் காண வைக்கும் வெயில்


ஆடியில் ஆட்டம் காண வைக்கும் வெயில்
x
தினத்தந்தி 3 Aug 2023 12:15 AM IST (Updated: 3 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் ஆடி மாதத்தில் மக்களை ஆட்டம் காண வைக்கும் வகையில் வெயில் 100 டிகிரி கொளுத்தியது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் ஆடி மாதத்தில் மக்களை ஆட்டம் காண வைக்கும் வகையில் வெயில் 100 டிகிரி கொளுத்தியது.

வாட்டி வதைக்கும் வெயில்

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை அவ்வப்போது பெய்து வருகிறது. அதே வேளையில் ஒரு சில மாவட்டங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயில் சுட்டெரிக்கும் மாவட்டங்களின் வரிசையில் நாகை, முக்கிய இடம் பிடித்துள்ளது.

நாகை பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதாக மக்கள் கூறுகிறார்கள்.

நாகை மக்கள் வேதனை

கடந்த மே, ஜூன் ஆகிய மாதங்களில் வெயில் தனது உக்கிர முகத்தை காட்டியது. இதனால் பள்ளிகள் திறக்கும் தேதியும் தள்ளி வைக்கப்பட்டது. பொதுவாக ஆடி மாதத்தில் வெயில் தணிந்து காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது ஆடி மாதத்திலும் வெயில் ஆட்டம் காண வைப்பதாக நாகை பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

நாகையில் கடந்த சில நாட்களாக காலை 8 மணிக்கெல்லாம் வெயில் சுட்டெரிக்க தொடங்கி விடுகிறது. மதிய நேரத்தில் அனல் பறக்கிறது. மாலை வேளையை கடந்து இரவு நேரத்திலும் வெயிலின் தாக்கம் நீடிக்கிறது. மின் விசிறி இருந்தாலும் அதனால் எந்த பயனும் இல்லை என்பது நாகை மாவட்ட பகுதியை சேர்ந்த மக்களின் புலம்பல். வெயிலின் தாக்கம் காரணமாக பலர் இரவில் தூக்கமின்றி தவிக்கிறார்கள்.

கடும் அவதி

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'ஆடி காற்றில் அம்மியும் நகரும் என்பார்கள். ஆனால் தற்போது கால நிலை மாறி ஆடி வெயிலில் பச்சிலையும், தீப்பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடும் வெயில் மற்றும் அளவுக்கு அதிகமான வியர்வையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிப்பட்டு வருகிறோம். ஆகஸ்டு மாதத்திலும் வெயில் அடிப்பது பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது' என்றனர். இந்த நிலையில் நாகையில் நேற்று 100 டிகிரி வெயில் கொளுத்தியது. தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் மேலும் 2 நாட்கள் நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலை மாற வருண பகவான் கருணை காட்ட வேண்டும் என நாகை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


Next Story