நாகை புதிய கடற்கரையில் உயர் கோபுர மின்விளக்கு சரி செய்யப்பட்டது
நாகை புதிய கடற்கரையில் உயர் கோபுர மின்விளக்கு சரி செய்யப்பட்டது
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக நாகை புதிய கடற்கரையில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு சரி செய்யப்பட்டது.
புதிய கடற்கரை
நாகையின் பொழுதுபோக்கு அம்சமாக புதிய கடற்கரை உள்ளது.
விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் வேளாங்கண்ணிக்கு அடுத்தபடியாக பொதுமக்கள் கூடும் முக்கிய கடற்கரையாகவும் உள்ளது. நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து காற்று வாங்கி இளைப்பாறுகின்றனர். காலை, மாலை நடைபயிற்சி செய்வதற்காகவும் வருகின்றனர். குறிப்பாக இங்கு விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதும். இரவு 9 மணி வரை பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும்.
இருளில் மூழ்கியது
இந்த நிலையில் கடற்கரையில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு கடந்த சில நாட்களாக செயல்படாமல் இருந்தது. மின்விளக்கு எரியாததால் நாகை புதிய கடற்கரை இருளில் மூழ்கி கிடந்தது.
இதனால் கடற்கரைக்கு வந்து செல்லும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்தனர்.
எனவே நாகை புதிய கடற்கரையில் உள்ள உயர் கோபுர மின் விளக்கை சரி செய்து ஒளிர விட வேண்டும் என்று 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது.
சரிசெய்யப்பட்டது
இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நாகை புதிய கடற்கரையில் உள்ள உயர்கோபுர மின் விளக்கை சரிசெய்து ஒளிர செய்தனர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர்.