மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மலைவாழ் மக்கள்
வேலூரில் மலைவாழ் மக்கள் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட குழு சார்பில் மனு அளிக்கும் போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சி.எஸ்.மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் சரவணன், துணை செயலாளர் மாரிமுத்து உள்பட நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
போராட்டத்தில் சொந்தவீடு இல்லாத பழங்குடி மக்களுக்கு கேரள அரசை போன்று அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.10 லட்சத்தில் வீடு கட்டி கொடுக்க வேண்டும். வங்கிகளில் மானிய உதவியுடன் கடன் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்பாடி தாலுகா குறவன்குடிசை, ஒட்டனேரி, ராஜாபாளையம், செஞ்சி, பாறையூர், குகையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டுமனை பட்டா, சாலை வசதி, கால்வாய் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். வன விலங்குகளால் ஏற்படும் உயிரிழப்புகள், பயிர் சேதங்களுக்கு இழப்பீடு தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில் நிர்வாகிகள் மற்றும் மலைவாழ் மக்கள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் அளித்தனர்.