மாணவர்களை பள்ளியுடன் இணைக்கும் பாலமாக இல்லம் தேடிக்கல்வி மையம் திகழ்கிறது
இல்லம் தேடிக் கல்வி மையங்கள் மாணவர்களை பள்ளியுடன் இணைக்கும் பாலமாக திகழ்கிறது என ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரக்கல்வி அலுவலர் சீனிவாசன் கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
இல்லம் தேடிக் கல்வி மையங்கள் மாணவர்களை பள்ளியுடன் இணைக்கும் பாலமாக திகழ்கிறது என ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரக்கல்வி அலுவலர் சீனிவாசன் கூறினார்.
பயிற்சி வகுப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வி உயர் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கான 5-ம் தொகுதி புத்தகத்திற்கான பயிற்சி வகுப்பு கிருஷ்ணன்கோவிலில் நடைபெற்றது.
பயிற்சிக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் மருதக்காளை தலைமை தாங்கினார். ஆசிரியப் பயிற்றுனர் செல்வம், இல்லம் தேடிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் துணை ஆய்வாளர் தங்கேஸ்வரன் வரவேற்றார்.
வரப்பிரசாதம்
பயிற்சியைத் தொடங்கி வைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரக்கல்வி அலுவலர் சீனிவாசன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா பெருந்தொற்றால் 2 ஆண்டுகள் படிப்பை இழந்து நின்ற தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை மாணவர்களுக்கு இத்திட்டம் ஒரு வரப்பிரசாதம். மாணவர்களின் கற்றல் இழப்புகளை ஈடு செய்யவும், அவர்களை பள்ளியுடன் இணைக்கும் பாலமாகவும் இத்திட்டம் செயல்படுகிறது. இல்லம் தேடிக்கல்வி மையங்களில் மாணவர்கள் மாலை நேரங்களில் இத்திட்டத்தின் கீழ் கற்று வருகிறார்கள். இவர்களுக்கு தன்னார்வலர்கள் கல்வி மற்றும் கல்வி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளைக் கற்றுக்கொடுத்து வருகிறார்கள்.
வழிகாட்டுதல்
அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் இந்த மையங்கள் கிராமப்புற மாணவர்களுக்கு நல் வழிகாட்டும் மற்றும் பள்ளியில் கற்ற பாடங்களை நினைவுபடுத்தி, தொடர்ந்து கற்றலில் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பயிற்சியின் கருத்தாளர்களாக கிறிஸ்டி தங்கநாயகம், ஜஸ்டின் தங்கராஜ், வரமணி அப்பன்ராஜ், பிரைட்டி சிங் ஆகியோர் செயல்பட்டனர். பயிற்சியில் 110 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு தொகுதி 5 பயிற்சி புத்தகம் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.