மரத்திடம் மனு அளித்து தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் நூதன போராட்டம்


மரத்திடம் மனு அளித்து தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 28 March 2023 12:15 AM IST (Updated: 28 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மரத்திடம் மனு அளித்து தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மரத்திடம் மனு அளித்து தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளிருப்பு போராட்டம்

தோட்டக்கலைத்துறையில் தினக்கூலியாக 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறையின் கீழ் செயல்படும் பூங்கா மற்றும் பண்ணைகளில் பணிபுரியும் ஊழியர்கள் கடந்த 23-ந் தேதி முதல் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று 5-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தை, காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை என கூறி, பூங்காவில் நூற்றாண்டு பழமை வாய்ந்த தேவதார் மரத்திடம் கண்ணீருடன் மனு அளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணி நிரந்தரம்

இதுகுறித்து பூங்கா ஊழியர் சுப்ரமணி கூறுகையில், 480 நாட்கள் முதல் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசாணைப்படி நாள் ஒன்றுக்கு ரூ.700 அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும், தற்காலிக ஊழியர்களை காலியாக உள்ள பண்ணை மற்றும் தோட்டக்கலைத் துறை பூங்காக்களில் நிரந்தர பணியாளர்களாக பணி மாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட தோட்டக்கலைத்துறை பூங்கா மற்றும் பண்ணை ஊழியர்கள் தாவரவியல் பூங்காவில் 5-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

இதுவரை தமிழக அரசோ, மாவட்ட நிர்வாகமோ, தோட்டக்கலைத்துறை அதிகாரிகளோ நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பூங்காவில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த தேவதார் மரத்திடம் கண்ணீருடன் மனு அளித்தோம். அதிகாரிகள் தான் எங்களது கோரிக்கையை கேட்கவில்லை. நாங்கள் வளர்த்த மரமாவது எங்களது கோரிக்கையை கேட்கும் என்ற நம்பிக்கையில் மனு அளித்தோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றார்.


Related Tags :
Next Story